நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் கரிம வெளியீடு பத்து மடங்கானது

நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் கரிம வெளியீடு பத்து மடங்கானது

2 mins read
a5b4ae79-059c-4fbb-8b70-83352644b1c7
-

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்­டு­வரை, சிங்­கப்­பூரில் நிலப் பயன்­பாட்டு மாற்­றங்­களால் பசுமை இல்ல வாயுக்­கள் வெளி­யீடு கிட்­டத்­தட்ட பத்து மடங்­காக அதி­க­ரித்­த­தாக அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்ட ஓர் அறிக்கை தெரி­விக்­கிறது.

பொது­வாக, காடு­களும் தாவ­ரங்­களும் கரி­ய­மி­ல­வாயு நன்கு உறிஞ்­சும் திறன் கொண்­டவை. இந்­நி­லை­யில், வீட­மைப்பு மற்­றும் பிற மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்­காக அவை அழிக்­கப்­ப­டும்­போது கரி­ய­மில வாயு வெளி­யி­டப்­ப­டு­கிறது.

கடந்த 2016ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த கரி­ய­மில வாயு வெளி­யீட்­டில் நிலத்­தின் பங்­க­ளிப்பு 0.03%.

இவ்­வி­கி­தம் 2018ஆம் ஆண்­டில் 0.21 விழுக்­கா­டாக அதி­க­ரித்­தது.

அதே­போல, நிலப் பயன்­பாட்டு மாற்­றங்­க­ளால் 2016ஆம் ஆண்­டில் 11.95 டன் கரி­மம் வெளி­யி­டப்­பட்ட நிலை­யில், 2018ஆம் ஆண்­டில் அது 106.36 டன்­னாக உயர்ந்­தது.

புவி வெப்­ப­ம­டை­வ­தற்­கும் அதன்­மூ­லம் பரு­வ­நிலை மாற்­றத்­திற்­கும் முக்­கி­யக் கார­ண­மாக விளங்­கு­வது கரி­ய­மில வாயு­தான். அதுவே, சிங்­கப்­பூ­ரின் பசுமை இல்ல வாயுக்­கள் வெளி­யீட்­டில் பெரும்­பங்கு வகிக்­கின்­றது.

மீத்­தேன், நைட்­ரஸ் ஆக்­சைடு போன்­றவை தீங்கு விளை­விக்­கும் மற்ற வாயுக்­கள்.

கடந்த 2016-2018 கால­கட்­டத்­தில், சில காட்­டுப்­ப­கு­தி­கள் குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளா­கப் மாற்­றப்­பட்­டன என்­றும் ஆயி­னும் சட்­ட­பூர்­வ­மா­கப் பாது­காக்­கப்­படும் இயற்கை வனப்­ப­கு­தி­கள் எது­வும் அழிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் தேசிய பூங்­காக் கழ­கத்­தின் அனைத்­து­ல­கப் பல்­லு­யிர்ப் பாது­காப்பு மூத்த இயக்கு­நர் லீனா சான் கூறினார்.

புக்­கிட் தீமா, மத்­திய நீர்ப்­பி­டிப்பு, சுங்கை பூலோ சதுப்பு நிலப்­ப­குதி, லேப்­ர­டார் ஆகி­யவை சிங்­கப்­பூ­ரால் பாது­காக்­கப்­படும் நான்கு இயற்கை வனப்­ப­கு­தி­கள்.

சிங்­கப்­பூ­ரின் நிலப் பயன்­பாட்­டால் வெளி­யி­டப்­படும் பசுமை இல்ல வாயுக்­கள் குறித்த விவ­ரம் சிங்­கப்­பூ­ரின் ஐந்­தா­வது ஈராண்­டுப் புதுப்­பிக்­கப்­பட்ட பதிவு அறிக்­கை­யில் இடம்­பெற்­றுள்­ளது.

இயற்கை எரி­வாயு போன்ற புதை­ப­டிவ எரி­பொ­ருள்­களை எரிப்­பதே சிங்­கப்­பூ­ரில் பசுமை இல்ல வாயுக்­கள் வெளி­யிட்­டீற்கு முக்­கியக் கார­ணம். 2018ல் சிங்­கப்­பூரின் பசுமை இல்ல வாயுக்­கள் வெளி­யீட்­டில் அதன் பங்கு 93.5%.

வரும் ஆண்­டு­களில் தாவ­ரங்­கள்­மூ­லம் கரி­மச் சேமிப்பை அதி­கப்­ப­டுத்த தேசிய பூங்­கா­கக் கழ­கம் திட்­ட­மிட்­டுள்­ளது. தனது பசு­மை­ம­ய­மாக்­கும் நட­வ­டிக்­கை­கள் நீடித்து நிலைக்­கும் வகை­யில் இருக்க அது சமூ­கத்­து­டன் தொடர்ந்து பணி­யாற்­றும் என்று டாக்­டர் சான் சொன்­னார்.

கடந்த 2020 ஏப்­ர­லில் தொடங்­கப்­பட்ட 'ஒரு மில்­லி­யன் மரங்­கள்' இயக்­கத்­தின்­மூ­லம் வரும் 2030ஆம் ஆண்­டிற்­குள் ஒரு மில்­லி­யன் மரங்­களை நட சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது. அவ்­வி­யக்­கத்­தின்­கீழ் இது­வரை 460,000 மரங்­கள் நடப்­பட்­டு­விட்­டன.