கொவிட்-19 தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு வந்துள்ள வணிகர்கள், 2023ஆம் ஆண்டில் தொழில் நிலையாக இருக்கும் என்று நம்புகின்றனர்.
குறிப்பாக, கொவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உணவகங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பெரிய குழுக்களாகச் சேர்ந்து உணவு உண்ண முடியும் என்று அரசாங்கம் அறிவித்தபின், உணவகங்கள் ஓரளவிற்கு இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து, அடுத்த ஆண்டில் தொழில் நிலையாக இருக்கும் என்றும் சவால்கள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் உணவக உரிமையாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இருப்பினும், தாங்கள் எப்போதும் எதிர்கொள்ளும் ஒரு சில சவால்கள் குறித்து உரிமையாளர்கள் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
பொதுவாகவே, விலைவாசி உயர்வு என்பது மக்களும் வணிகர்களும் எப்போதும் எதிர்நோக்கும் ஒன்றாகும்.
கொவிட்-19 தாக்கத்தால் பொருள்களின் விலை அதிகரித்து விட்டன. எடுத்துகாட்டாக, முன்பு $4 முதல் $4.50வரை கொடுத்து ஒரு கோழியை வாங்கிய உணவகங்கள், இன்று அதற்கு $6.50 முதல் $7 வரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. அதேபோல அரிசி, காய்கறி, இறைச்சி என்று எல்லாமே விலையேற்றம் கண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார் 'பாய் பிரியாணி' உணவக மேலாளர் காதர் முஹைதீன், 43.
ஆனாலும், அதனை ஈடுகட்ட உணவு விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையக்கூடும் என்பதால், உணவு விலையை உயர்த்த உணவகங்கள் பெரிதும் சிந்திக்கின்றன.
கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறை மட்டுமே உணவு விலையை உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார் திரு காதர்.
இந்நிலையில், கடை வாடகை உயர்த்தப்பட்டுள்ளதால் உணவு விலையை உயர்த்துவதைத் தவிர தமக்கு வேறு வழி தெரியவில்லை என்றார் அவர்.
ஐந்து முதல் பத்து நாள்களுக்குள் ஒரு பெட்டி தக்காளியின் விலை பத்து வெள்ளியாக உயர்ந்து விடுகிறது என்றார் 'போர்ட்டோ நோவோ கஃபே' இயக்குநர் முகம்மது ஃபரூக் ஷாஹுல் ஹமீது, 31.
விலையேற்ற இறக்கம் என்பது எப்போதும் இருப்பதுதான் என்றாலும் இதுபோன்று பெரும் விலையேற்றம் உணவக உரிமையாளர்களையே பெரிதும் பாதிக்கின்றன. மூலப்பொருள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப அவர்கள் உணவு விலையை உயர்த்துவதும் சாத்தியமில்லை.
உணவு விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் வராமல் போய்விடலாம் என்று அவர்கள் அச்சப்படுகின்றனர்.
இதற்கிடையே, விலைவாசியை விட பெரிய சிக்கலாக இருப்பது மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை ஒதுக்கீடுதான் என்று குறிப்பிட்டார் ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் இயக்குநர் சாம், 38.
ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாததாலும் ஊழியர் பற்றாக்குறையாலும் வணிகம் பாதிக்கிறது என்கிறார் திரு சாம்.
ஆனாலும், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மாற்றங்கள் இந்தச் சிக்கலைப் போக்கி, நிலைமையைச் சீர்செய்து, தொழிலை மேம்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.
கொரோனா பரவலின்போது அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக நன்றியுணர்வுடன் இருக்கும் உணவக உரிமையாளர்கள், கட்டுப்பாடுகள் குறையக் குறைய வணிகம் பெருகும் என்று நம்புகின்றனர்.
அவர்களின் இந்நம்பிக்கைக்குக் காரணம், இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளில் இருந்தும் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதுதான்.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதிலிருந்து தொழிலில் நல்ல மாற்றம் காணப்படுகிறது என்றார் 'முத்துஸ் கறி' உணவகத் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், 52.
பல சிக்கல்களுக்கு இடையில் உணவகத் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கண்டறிந்து உணவுவகைகளிலும் அதற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வருவது வணிகம் நிலைப்பதற்கும் அதிகரிப்பதற்கும் உதவும் என்று 'பொடி அண்ட் பொரியல்' தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ கிரண் ராகவன், 46, கூறினார்.
மனிதவளச் சிக்கல், வாடகை, விலைவாசி உயர்வு, பொருளியல் மந்தநிலை எனப் பலவற்றை 2023ல் எதிர்நோக்கக்கூடும் என்றாலும் 'இதுவும் கடந்து போகும்' என்பது பெரும்பாலோரின் மனநிலையாக இருக்கிறது.

