நொவினா ஹெல்த்கேர் குருப் (NGHG), என்ற குழுமத்தின் இணை நிறுவனரான நெல்சன் லோ என்பவரும் அவரின் ஊழியரான மைக்கல் வோங் என்பவரும் கைதானதாகவும் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது என்றும் காவல் துறை தெரிவித்தது.
சிங்கப்பூரர்களான அந்த இருவருக்கும் வயது 43. அவர்கள் காவல்துறை கேன்டோன்மண்ட் வளாகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டனர்.
லோவும் வோங்கும் 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூரை விட்டு வெளியேறி விட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களைக் காவல்துறை தேடிவந்தது.
இருவரும் சிங்கப்பூரை விட்டு வெளியேறியதற்குப் பிறகு காவல்துறையிடம் புகார் ஒன்று தாக்கலானது.
நொவினா ஹெல்த்கேர் குருப்பின் நிதி அறிக்கைகள் சிலவற்றில் எர்ன்ஸ்ட் & யங் கணக்குத் தணிக்கை நிறுவனத்தின் கையெழுத்துகளில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக அந்தப் புகார் கூறியது.
தொடர்ந்து இருவரையம் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அனைத்துலக காவல்துறையும் இதன் தொடர்பில் விழிப்பூட்டப்பட்டது.
சீனாவின் காவல்துறை ஒத்துழைப்பு, உதவியுடன் இரண்டு பேரும் டிசம்பர் 24ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பியதாகவும் அவர்களை அதே நாளன்று வர்த்தக விவகாரத் துறை கைது செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
இருவரும் தலா இரு மோசடிக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்கள்.
நொவினா ஹெல்த்கேர் குருப் குழுமத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளில் மோசடி செய்து அவற்றை வைத்து அவர்கள் $18 மில்லியன் தொகையை வங்கியில் இருந்து கடனாக வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. விசாரணை தொடர்கிறது.
லோவும் அவரின் உறவினரான டெரன்ஸ் லோவும் சேர்ந்து நொவினா ஹெல்த்கேர் குருப் குழுமத்தை உருவாக்கினர்.
அந்த இரண்டு பேரும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிளப்பின் நியூகாசல் யுனைடெட் அணியை £280 மில்லியன் (S$457 மில்லியன்) கொடுத்து வாங்க விண்ணப்பித்து அதன் மூலம் 2020ல் பரபரப்பாக பேசப்பட்டவர்கள்.

