முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறையினருக்கும் சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தின் நீல நிற அட்டைகளை வைத்திருப்போருக்குமான விலைக் கழிவுகள் வரும் 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
ஃபேர்பிரைஸ் பேரங்காடி நேற்று இதைத் தெரிவித்தது. ஃபேர்பிரைசின் எல்லாக் கிளைகளிலும் அது நடத்தும் யூனிட்டி மருந்தகங்களிலும் அவர்களுக்கான விலைக்கழிவுகள் தொடரும்.
விலைக்கழிவுத் திட்டத்தின் மூலம், முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறையினருக்கும் நீல நிற சாஸ் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் குறிப்பிட்ட சில நாள்களில் மூன்று விழுக்காடு விலைக்கழிவு வழங்கப்படுகிறது.
ஓர் ஆளுக்கு 1,200 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான மாத வருமானம் உள்ள குடும்பங்கள் நீல நிற சாஸ் அட்டைகளுக்குத் தகுதி பெறும்.
விலைக்கழிவுகளைப் பெற, முன்னோடி, மெர்டேக்கா, சாஸ் நீல நிற அட்டைகளைக் காட்டவேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு முறையில் அதிகபட்சம் $200 மதிப்புள்ள பொருள்களை வாங்கும்போது விலைக்கழிவு அளிக்கப்படும்.
தனது விலைக்கழிவுத் திட்டங் களின் மூலம் இவ்வாண்டு 11.5 மில்லியன் வெள்ளிப் பணத்தை அந்த மூன்று பிரிவினரும் மிச்சப் படுத்தியதாக ஃபேர்பிரைஸ் கூறியது.
பேரங்காடி இவ்வாண்டு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அளித்துவந்த வேறு விலைக் கழிவு திட்டமும் அடுத்தாண்டு நீட்டிக்கப்படும்.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முதியவர்களுக்கும் வசதி குறைந்தவர் களுக்கும் உதவும் நோக்கில் விலைக்கழிவுத் திட்டம் அடுத்த ஆண்டும் தொடரும் என்று ஃபேர் பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி விபல் சாவ்லா கூறினார்.
"வாழ்க்கைச் செலவுகளை மட்டுப்படுத்துவதில் ஃபேர்பிரைஸ் எப்போதுமே முக்கிய கவனம் செலுத்தி வந்துள்ளது. குழப்பமான பொருளியல் சூழலில் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று உறுதி செய்ய ஃபேர்பிரைஸ் கடப்பாடு கொண்டிருக்கிறது.
"விலைக்கழிவுகள் நீட்டிக்கப்படுவதால் அன்றாட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதால் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்க உதவும்," என்றார் திரு சாவ்லா.
ஃபேர்பிரைஸ் இதுபோன்ற விலைக்கழிவுத் திட்டங்களை கடந்த சில மாதங்களில் அறிவித்தது. வரும் 2023ன் முதல் பாதியில் தனது கடைகளிலும் இணையத்தளத்திலும் வழக்கமாக மக்கள் வாங்கும் 500 பொருள்களுக்கு ஒரு விழுக்காடு வழங்கப்போவதாக ஃபேர்பிரைஸ் நவம்பர் மாதத்தில் கூறியது.