சீனப் புத்தாண்டு வருவதை முன்னிட்டு, பரிசளிக்க ஏற்ற நிலையில் உள்ள ரொக்கத் தாள்களைப் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள பொதுமக்கள் வரும் ஜனவரி 5ஆம் தேதியிலிருந்து முன் பதிவு செய்துகொள்ளலாம். சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று அதைத் தெரிவித்தது.
அதற்கு டிபிஎஸ், ஒசிபிசி, யுஓபி வங்கிகளின் இணையத்தளங்களுக்குச் சென்று முன்பதிவு செய்யவேண்டும். வங்கிக் கிளைகளில் அதிகக் கூட்டம் ஏற்படும் சாத்தியத்தை இது குறைக்கும்.
$2, $10, $50 ஆகியவற்றின் பணத் தாள்களை டிபிஎஸ், யூஓபி வங்கிகள் கூடுதல் எண்ணிக்கையில் வைக்கும். இவற்றைக் குறிப்பிட்ட தற்காலிக தானியங்கி வங்கி இயந்திரங்களிலும் வங்கிக் கிளைகளில் உள்ள தானியங்கி இயந்திரங்களிலும் பெறலாம்.
60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களும் உடற்குறையுள்ளவர்களும் முன்பதிவு செய்யாமல் டிபிஎஸ், யுஓபி, ஒசிபிசி வங்கிக் கிளைகளில் பணத்தாள்களை மாற்றிக் கொள்ளலாம்.
பரிசளிக்க ஏற்ற நிலையில் உள்ள ரொக்கப் பணத்தாள்கள், பொதுவாக சுத்தமானவை. பண்டிகை காலத்தில் பரிசாக அளிப்பது உட்பட, அவை புழக்கத்தில் இருப்பதற்கு ஏற்ற தரத்தில் உள்ளவை. பணத்தாள் பதனீட்டு இயந்திரங்களில் அத்தாள்களின் தரம் சரிபார்க்கப்பட்டுள்ளது. தானியங்கி வங்கி இயந்திரங்களில் பெறும் பணத்தாள்களைப் போன்ற தரத்தில் உள்ளவை.
பரிசளிப்பதற்காக புதிய பணத்தாள்களை அச்சிடும்போது தேவையில்லாமல் கரிமம் வெளியேற்றப் படுகிறது. அதனுடன் வளங்களும் வீணாகின்றன. அதனால் சுற்றுப்புறத்துக்கு உகுந்த வழிகளில் பணத்தைப் பரிசாக அளிப்பதை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் முயற்சிகளில் ஒன்றாக பரிசளிக்க ஏற்ற நிலையில் உள்ள பணத்தாள்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
பண்டிகைகளில் பரிசளிப்பதற்கு பொதுமக்கள் 2 வெள்ளி, 10 வெள்ளித் தாள்களையே அதிகம் விரும்புவர் என்றும் அவற்றை விரும்பிய எண்ணிக்கையில் தானியங்கி வங்கி இயந்திரங்களில் பெறுவது எளிதல்ல என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் குறிப்பிட்டது.
டிபிஎஸ் வங்கி தற்காலிகமாக அமைக்கவுள்ள தானியங்கி இயந்திரங்களிலும் யுஓபியின் குறிப்பிட்ட சில அத்தகைய இயந்திரங்களிலுத் முன்பதிவு செய்துகொள்ளாமல் புதிய பணத்தாள்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சீனப் புத்தாண்டுக்காகவும் மற்ற பண்டிகைகளுக்காகவும் ஒவ்வோர் ஆண்டும் 10 மில்லியன் புதிய பணத்தாள்கள் அச்சடிக்கப் படுகின்றன. அவற்றில் பெரும்பான்மை பரிசளிக்க மட்டும் பயன் படுகின்றன. சீனப் புத்தாண்டு முடிந்த சிறிது காலத்தில் அவை நாணய ஆணையத்திடம் திரும்பத் தரப்படுகின்றன.
ஓராண்டில் 430 நாலறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்குத் தேவையான மின் உற்பத்தியில் வெளியேறும் அதே அளவு கரிமம் அந்தக் கூடுதல் பணத் தாள்களை அச்சடிக்கும்போது வெளியேறுகிறது. ஓராண்டுக்கு 10,000 புதிய மரங்களை நட்டால்தான் அந்த வெளியேற்றத்தை ஈடுகட்ட முடியும்.

