மாதங்கி இளங்கோவன்
'வேணு கான லஹரி' என்னும் பாஸ்கர் கலைக் கழகத்தைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக்குழு இம்மாதம் தென்னிந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பல படைப்புகளை மேடையேற்றி கைதட்டல்களைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த முதல் கர்நாடக இசைக் குழுவாக அவர்கள் சென்னை மார்கழி இசை விழாவில் பங்கெடுத்தனர். தேசிய கலைகள் மன்றம், பாஸ்கர் கலைக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
அவர்களது பயணம் இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதியன்று முடிவடைந்தது. தங்கள் பயணத்தின்போது சென்னையில் மட்டுமல்லாமல், கோயம்புத்தூர், திருச்சூர், குருவாயூர் என பற்பல இடங்களில் குழுவினர் இசை நிகழ்ச்சிகளைப் படைத்தனர்.
இப்பயணத்துக்காக பிரபல உள்ளூர் புல்லாங்குழல் கலைஞரான கானவினோதன் ரத்னம் மொத்தம் 10 புல்லாங்குழல் கலைஞர்களுக்கு ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பயிற்சியளித்து, சில சவாலான பாடல்களையும் அவர்களுக்குக் கற்பித்தார். தேசிய கலைகள் மன்றத்தின் இளம் கலைஞர் விருது, உலக அமைதி, நல்லிணக்க அமைப்பின் வாழ்நாள் சாதனை விருது, மனிதநேய பதக்கம் ஆகியவை அவர் வென்ற விருதுகளில் சில.
மேடையேறிய கலைஞர்களுள் சிலர் தங்கள் புல்லாங்குழல் அரங்கேற்றத்தை நடத்தி முடித்துள்ளனர், சிலரோ தொடர்ந்து ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வருகின்றனர்.
இசை மீது தீரா மோகம் கொண்ட இவர்களுக்கு, இந்தியாவில் தங்கள் இசையார்வத்தை வெளிக்காட்டும் நல்வாய்ப்பை இந்தியப் பயணம் தந்ததாக எண்ணுகின்றனர்.
கடந்த 17 ஆண்டுகளாக புல்லாங்குழல் வாசிக்க கற்றுவரும் திவ்யஸ்ரீ, 23, " ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் நவராத்திரி விழாவின்போது ஆலயங்களில் புல்லாங்குழல் வாசிப்போம். இம்முறை இந்தியாவில் என் நண்பர்களோடு சேர்ந்து ஆன்மிகம் நிறைந்த பயணத்தில் புல்லாங்குழலை வாசித்தது எனக்கு மனநிறைவைத் தந்தது," என்றார் திவ்யா, 2019ஆம் ஆண்டிலும் இந்தியாவில் இசை நிகழ்ச்சியைப் படைத்துள்ளார்.
அதேபோல, ஏழாண்டுகளாக புல்லாங்குழல் வாசித்து வரும் மனோஷ் விஜய், 31, "இதுபோன்ற பெரும் மேடைகளில் இசை படைக்கும்போது எனக்கு பயமிருந்தாலும், பார்வையாளர்களின் ஊக்கத்தால் தன்னம்பிக்கையுடன் மேடையேற முடிந்தது," என்றார்.
"ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குப் பல மணி நேரம் பயணம் செய்துவிட்டு மேடையேறி வாசிப்பது சற்று சவாலாகத்தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் குழுவினரின் உற்சாகமும் குழு உணர்வும் சிறப்பான இசைப் படைப்பை சாத்தியமாக்கியது," என்றார்.
உள்ளூர் பரதநாட்டியக் கலைஞர் சிவாஷினி குமாரின் நளின நடனமும் அக்குழுவின் இசைப் படைப்புகளுக்கு அழகு சேர்த்தது.
தாம் முன்பே கற்றுக்கொண்ட நடனங்களை மீண்டும் இந்தியாவில் படைத்தார் சிவாஷினி. தனி நடனங்களை இம்மேடைகளில் படைத்தது அவருக்கு முதல் அனுபவமாக அமைந்தது.
புல்லாங்குழல் இசைக்குழுவை பாஸ்கர் கலைக் கழகத்தில் அமைக்க வேண்டும் என்பது அதன் நிறுவனர்களில் ஒருவரான மறைந்த திருமதி சாந்தா பாஸ்கரின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அவரது கனவு இவ்வாண்டு ஜூலை மாதத்தில் 'வேணு கான லஹரி' என்ற பெயரில் உயிர்பெற்றது.

