தமது உயர்நிலைப்பள்ளிக்கு அருகே 15 வயது மாணவர் ஒருவரைக் குத்திய பதின்ம வயது இளையருக்கு நேற்று சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டது. கறுப்பு நிற 'நக்கல் டஸ்டர்' ஆயுதத்தைப் பயன்படுத்தி அந்த மாணவர் தாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்திய அந்த இளையருக்கு இப்போது 18 வயது. ஆனால், குற்றம் புரிந்தபோது அவருக்கு 17 வயது என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில் குறைந்தது 12 மாதங்களுக்கு அவர் தடுத்துவைக்கப்படுவார்.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் 'நக்கல் டஸ்டர்' ஆயுதத்தை வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டையும் அவர் முன்னதாக ஒப்புக்கொண்டார்.
அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி காலை, அந்த 15 வயது மாணவர் சக மாணவர்கள் இருவருடன் உயர்நிலைப் பள்ளியைவிட்டு புறப்பட்டார். அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அருகில் இருந்தபோது அந்த இளையர் அவர்களை எதிர்கொண்டார்.
அந்த மாணவர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவுடன், அந்த இளையர் தமது
பாக்கெட்டிலிருந்து கறுப்பு நிற 'நக்கல் டஸ்டர்' ஆயுதத்தை எடுத்தார். அதை தம் வலதுக் கையில் அணிந்து அந்த மாணவரின் தாடையில் குத்தினார்.
அந்த மாணவருக்கும் அந்த இளையரின் காதலிக்கும் இடையே முன்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் தொடர்பில் அந்த மாணவரை அவர் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.
அந்த மாணவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய நண்பர்கள் காவல்துறையை அழைத்தனர்.

