வரும் 2028ஆம் ஆண்டில் மாணவர்கள் தெமாசெக் தொடக்கக் கல்லூரிக்குத் திரும்பும்போது, 1970களில் இருந்து அங்குள்ள இரு காளான் வடிவ விரிவுரைக்கூடங்கள் இல்லாது போகலாம்.
பிடோக்கில் அமைந்துள்ள தெமாசெக் தொடக்கக் கல்லூரியில் வரும் 2024ஆம் ஆண்டில் இருந்து 2027ஆம் ஆண்டுவரை மறுமேம்பாட்டுப் பணிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சமூக நிலையிலும் கட்டடக்கலை நிலையிலும் குறிப்பிடத்தக்க இடங்களாகக் கருதப்படும் அந்த இரு விரிவுரைக்கூடங்களும் அங்கு தொடர்ந்து இருக்கும் என்று அதனுடன் தொடர்புடைய சிலர் நம்பிக்கை தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
இந்நிலையில், மறுமேம்பாடு காணவிருக்கும் மூன்று தொடக்கக் கல்லூரிகளின் வடிவமைப்புகள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்று கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
முன்னாள் ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி வளாகமும் முன்னாள் ஜூரோங் தொடக்கக் கல்லூரி வளாகமும் மற்ற இரு தொடக்கக் கல்லூரிகள். முன்னாள் ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி வளாகத்தில்தான் இப்போது ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி இயங்கி வருகிறது. அதுபோல், ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி, முன்னாள் ஜூரோங் தொடக்கக் கல்லூரி வளாகத்திற்கு இடமாறவுள்ளது.
அந்தத் தொடக்கக் கல்லூரி வளாகங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய அம்சங்களை அடையாளம் காண்பது தொடர்பில் அக்கல்வி நிலையங்களுடன் கல்வி அமைச்சு அணுக்கமாக ஒத்துழைக்கும் என்றும் சாத்தியமிருப்பின் அவை மறுமேம்பாட்டுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அமைச்சின் பேச்சாளர் சொன்னார்.
முன்னதாக, நிலப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அரசுப் பள்ளிகளை உயரமான கட்டடங்களில் அமைக்க கல்வி அமைச்சு திட்டமிட்டு வருகிறது என்று கடந்த அக்டோபரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அதாவது, சிங்கப்பூரின் முதலாவது உயர்மாடி தொடக்கக் கல்லூரியான யுனோயா தொடக்கக் கல்லூரியை ஒத்த வடிவமைப்பில் இந்த மூன்று தொடக்கக் கல்லூரிகளின் மறுமேம்பாடு அமையலாம்.
நேஷனல் தொடக்கக் கல்லூரிக்குப்பின் சிங்கப்பூரின் இரண்டாவது அரசாங்க தொடக்கக் கல்லூரியான தெமாசெக் தொடக்கக் கல்லூரி 1977ல் நிறுவப்பட்டது.
இயோ சூ காங்கில் உள்ள முன்னாள் ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரியின் மறுமேம்பாட்டுப் பணிகளும் 2024ல் தொடங்க இருக்கின்றன.
அங்குள்ள 'ஹேண்ட்ஸ் ஃபுல்' எனும் சிற்பம், அதன் முதல் தொகுதி மாணவர்களின் பரிசு. தொடர்பு, தகவலுக்கான முன்னாள் நாடாளுமன்றச் செயலாளர் ஹோ கா லியோங்கால் கடந்த 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அச்சிற்பம் திறந்து வைக்கப்பட்டது.

