செலவினங்கள் குறித்த கருத்தாய்வு: 13,100 குடும்பங்கள் பங்கேற்பு
சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை நடத்திவரும் 12வது குடும்பச் செலவினக் கருத்தாய்வில் 13,100 குடும்பங்கள் பங்குபெற உள்ளன. அக்குடும்பங்கள் 26 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கருத்தாய்வு நடைபெறும்.
இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கிய கருத்தாய்வு, அடுத்த ஆண்டு நவம்பர் வரையிலும் நடைபெறும்.
அவ்வகையில், 3வது மற்றும் 4வது குழுக்களுக்கான கருத்தாய்வு வரும் ஜனவரி மாதம் இடம்பெறும். அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட், சிக்லாப், வெஸ்ட் கோஸ்ட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் 3வது, 4வது கருத்தாய்வுக் குழுக்களில் இடம்பெறும்.
கருத்தாய்விற்குத் தெரிவுசெய்யப்படும் குடும்பங்களுக்கு அதுகுறித்து புள்ளிவிவரத்துறை கடிதம் அனுப்பும்.
கருத்தாய்வில் பங்கேற்கும் குடும்பங்கள், இணையம் வழியாக தங்களது படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். இணையம் வழியாகச் சமர்ப்பிக்காத குடும்பங்களைக் கருத்தாய்வு அதிகாரிகள் நேரில் சந்திப்பர்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை குடும்பச் செலவினக் கருத்தாய்வு நடத்தப்படுகிறது. அவ்வாறு திரட்டப்படும் தரவுகள், குடும்ப வருமானம் மற்றும் செலவிடும் தன்மை குறித்த ஆய்வுகளுக்கு உதவும்.
நிறுவனங்களை இணைப்பதும் கையகப்படுத்துவதும் குறைந்தன
சிங்கப்பூரிலும் இவ்வட்டாரத்திலும் இவ்வாண்டில் நிறுவனங்களை இணைப்பதும் கையகப்படுத்துவதும் குறைந்தன. சந்தை நிலவரம் ஏற்ற இறக்கமாக இருந்ததும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதுமே இதற்குக் காரணம். இருப்பினும், சிங்கப்பூரில் நிறுவன இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்பிருந்த நிலையை ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் வீவக மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு மெதுவடையும்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலையேற்றம் 2023ஆம் ஆண்டில் மெதுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த உயர்வு 6 முதல் 8 விழுக்காட்டிற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புராப்நெக்ஸ் ரியால்டி நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் வோங் சியூ யிங் கூறினார்.
மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை அதிகமாக உள்ள நிலையில், அவற்றின் விநியோகம் குறையலாம் என்பதாலும் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வரலாம் என்பதாலும் மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு மெதுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 12.7% ஏற்றம் கண்ட நிலையில், இவ்வாண்டு அந்த உயர்வு 9 முதல் 10 விழுக்காட்டிற்குள் இருக்கும் என்று பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.

