பொன்மணி உதயகுமார்
லிஷா பெண்கள் பிரிவின் தலைமைப் பொறுப்பை, திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லியிடம் இருந்து இம்மாத இறுதியில் ஏற்க இருக்கிறார் 33 வயது திருமதி கண்ணப்பன் ராஜலெட்சுமி.
அபிராமி ஜுவல்லர்ஸின் நிதி இயக்குநரான திருமதி கண்ணப்பன் ராஜலெட்சுமி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உதவி பொருளாளராக லிஷா பெண்கள் பிரிவின் நிர்வாகக் குழுவில் இணைந்தார். 2014இலிருந்து இதில் உறுப்பினராக இருக்கும் இவர், பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உதவி இருக்கிறார்.
அமைப்பில் சேர்ந்த பிறகு வணிகம், தொழில் முனைப்பு, வர்த்தகத்தில் பெண்களின் பங்கு போன்றவை குறித்து மேலும் தெரிந்துகொண்டதாகக் கூறும் இவர், தலைமைத்துவம் மற்றொரு கற்றல் பயணமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்.
இளைய தலைமுறையினர் அமைப்பை வழிநடத்த வேண்டும் என இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிந்தித்து வந்ததாகக் கூறினார் கடந்த 10 ஆண்டுகளாக இதற்குத் தலைமை தாங்கி நடத்தி வரும் திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லி 48.
கடந்த 10 ஆண்டுகளாக லிஷா பெண்கள் பிரிவு சாதித்தவை பற்றி மனநிறைவு அடைவதாகக் கூறிய திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லி, அனைத்துலகப் பெண்கள் தின நிகழ்ச்சிகள், தமிழ் மொழி மாத விழாக்கள், வணிகம் தொடர்பான உரைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பெண்களுக்கு ஊக்கத்தையும் உறுதியையும் அளித்ததில் மகிழ்ச்சி கொள்கிறார். இவர் தொடர்ந்து அமைப்பின் ஆலோசகராகச் செயல்படுவார்.

