சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் முழு நேர தேசிய சேவையாளராக இருந்தபோது கிருமிப் பரவல் விதிமுறைகள் தொடர்பான குற்றச்செயலுக்காக நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது.
அந்நேரத்தில் இரண்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கிய நூர் சியாஃபி அகமது அவற்றை மோசடிக்காரர்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்தார்.
பின்னர் 2021ஆம் ஆண்டு மே மாதம் இங்கிருந்து தப்பி இந்தோனீசியாவின் பாத்தாமிற்கு சட்டவிரோதமாகப் படகில் சென்றார்.
இவ்வாண்டு ஜனவரி 11ஆம் தேதி பாத்தாம் அதிகாரிகளிடம் சரணடைந்த அவருக்கு சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்ததன் பொருட்டு இந்தோனீசியாவில் மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பிறகு சிங்கப்பூர் திரும்பிய நூர், ஓசிபிசி வங்கியை ஏமாற்றிய சதித் திட்டத்தில் பங்கு வகித்தது, சென்ற ஆண்டு மே 2ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி வரை தேசிய சேவைக்கு செல்லத் தவறியது ஆகிய குற்றங்களை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
முன்னதாக கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்தில் சமூக ஒன்றுகூடலுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதன் தொடர்பில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நூருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது.
அவர் மீண்டும் அதே தவற்றைச் செய்ததால் நன்னடத்தை கண்காணிப்பு ரத்து செய்யப்பட்டு, சீர்திருத்தப் பயிற்சியைக் குறைந்தது ஓராண்டுக்கு மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டது.
ஒரு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நூர், உடற்பயிற்சி செய்தல், மனநல ஆலோசனை பெறுதல் ஆகியவற்றில் ஈடுபட நேர்ந்தது.
உரிமம் இன்றிச் செயல்பட்ட கடன்முதலையிடம் 2020, 2021ஆம் ஆண்டுகளில் கடன் வாங்கினார் நூர்.
வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலாமல் அவர்கள் கூறியபடி, தனது பெயரில் ஓசிபிசி வங்கிக் கணக்கு தொடங்கி அதனை கடன்முதலை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்தார்.
இந்தக் கணக்கில் முதலீட்டு மோசடி மூலம் பெறப்பட்ட $31,500 பணம் செலுத்தப்பட்டதும் மூன்றாம் தரப்பினர் வங்கிக் கணக்கை நிர்வகிப்பதும் கண்டறியப்பட்டது.
சிங்கப்பூர் திரும்பியதில் இருந்து நூர் சீர்திருத்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
மேலும் ஒருமுறை சீர்திருத்தப் பயிற்சிக்கு அவரது தகுதி குறித்து மதிப்பீடு செய்யும்படி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கு அடுத்த மாதம் 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

