வீட்டைச் சுத்தப்படுத்தியபோது முதலாளியின் 'ஏடிஎம்' அட்டையைத் திருடி, அதை 'கூரியர்' அஞ்சலில் தோழிக்கு அனுப்பினார் 29 வயது ஹுரியா.
பின்னர் தோழி மூலம் முதலாளியின் சேமிப்புக் கணக்கில் இருந்து $14,350 பணத்தை எடுத்துக்கொண்ட குற்றத்தை நேற்று அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
திருட்டுச் செயலைத் தூண்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஹூரியா ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஆறு மாதச் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கும்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
இந்தோனீசியரான ஹுரியா, 75 வயது மூதாட்டியின் இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தார். மூதாட்டியின் கணவரும் அங்கு வசித்ததாகக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அந்த வீட்டில் வேலைபார்த்த அவர் மாதச் சம்பளமாக $635 பெற்றுக்கொண்டார்.
முதலாளியும் அவரது குடும்பத்தினரும் தன்னை நல்லமுறையில் நடத்தியதாக நீதிமன்றத்தில் ஹுரியா தெரிவித்தார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாளி தனது கைப்பையில் வங்கி அட்டைகளை வைத்திருப்பதைக் கண்டுபிடித்தார் ஹுரியா. அவற்றில் யுஓபி வங்கியின் 'ஏடிஎம்' அட்டையும் அடங்கும்.
வங்கி அட்டைகளுக்கான மறைச்சொற்கள் எழுதப்பட்ட குறிப்பேட்டையும் மூதாட்டி கைப்பையில் வைத்திருப்பதை அவர் பார்த்தார்.
எனவே யுஓபி வங்கி அட்டையைத் திருடிய ஹுரியா அதனை 'கூரியர்' அஞ்சல் சேவை மூலம் ஃபுஜிரா ஃபெப்ரி ஜமயாந்தி எனும் பெயருடைய தனது தோழிக்கு அனுப்பினார்.
பின்னர் செப்டம்பர் 15ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடையில் அந்த அட்டையைப் பயன்படுத்தி $14,350 பணம் எடுக்கும்படி தோழியைக் கேட்டுக்கொண்டார்.
தனது பிஓஎஸ்பி வங்கிக் கணக்கில் இருந்து 3,000 வெள்ளி அனுமதியின்றி எடுக்கப்பட்டதாக அக்டோபர் மாதம் முதலாளி காவல்துறையில் புகாரளித்தார்.
ஹுரியாவிற்கு தண்டனை விதிக்கும்போது இந்தக் குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

