சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகள் இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மாக், உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பாங் கின் கியோங், பிஎஸ்ஏ இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைமை நிர்வாகி டான் சோங் மெங் ஆகியோருக்கு உயரிய விருது வழங்கப்படுகிறது. கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாள பெரும்பங்கு ஆற்றியதைத் தொடர்ந்து மூவருக்கும் அங்கீகாரம் வழங்க இவர்களுக்கு கொவிட்-19 தொடர்பில் ஆக உயரிய தேசிய விருதான மெச்சத்தக்க சேவை விருது வழங்கப்படுகிறது.
கிருமிப் பரவலைக் கையாள அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் ஆலோசகராகப் பணியாற்றியதற்குப் பேராசிரியர் மாக் இந்த விருதைப் பெறுகிறார். கிருமிப் பரவலை முறியடிக்கத் தேவையான வழிமுறைகளை வரைய இவர் அரசாங்க அமைப்புகளுக்கு உதவினார்.
கொவிட்-19 கிருமி தலைதூக்கியதற்கு சிறிது காலத்திற்கு முன்னர்தான் பேராசிரியர் மாக் மூத்த மருத்துவ ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கிருமிப் பரவல் நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்க, தனியார் அமைப்புகள் மட்டுமின்றி சமூக அமைப்புகளையும் ஒன்றாகச் செயல்பட வைத்ததற்குத் திரு பாங் கின் கியோங் கௌரவிக்கப்படுவதாகப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.
கிருமிப் பரவலைக் கையாளும் அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவிற்குப் பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட 'ஹோம்ஃபிரண்ட் கிரைசிஸ் எக்சிக்கியூட்டிவ்' குழுவிற்குத் திரு பாங் தலைமை தாங்கினார்.
கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது உலகளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. அப்போது சிங்கப்பூருக்குத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ததற்குத் திரு டான் சோங் மெங் அங்கீகாரம் பெறுகிறார்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கையாள பெரும்பங்காற்றியோர்