ஆண்டுதோறும் சிங்கப்பூரின் கல்வி அமைச்சு பள்ளி முதல்வர்களை மாற்றும், புதிய முதல்வர்களை நியமிக்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு 70 முதல்வர்கள் வேறு பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
18 ஆண்டுகளில் முதன்முறையாக இத்தனை பள்ளிகளுக்குப் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
"முந்தைய ஆண்டுகளில் பதிவானதைக் காட்டிலும் இம்முறை கூடுதலான பள்ளி முதல்வர்கள் ஓய்வுபெறுவதே இதற்குக் காரணம்," என்று கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆண்டுதோறும் பொதுவாக 50லிருந்து 70 பள்ளிகளுக்குப் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
26 பள்ளிகளுக்குப் புதிதாகப் பணியில் ஈடுபடும் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெறும் முதல்வர்களுக்கும் மூத்த கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது.
நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ரோசைத் பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் திரு சூரஜ் நாயர்.
கல்வி அமைச்சின் தொழில்நுட்பப் பிரிவில் தொழில்நுட்ப முறைகள் இயக்குநராகப் பணிபுரிந்த இவர், தனது புதிய பொறுப்பிலும் புத்தாக்க அம்சங்களைச் சேர்க்கும் இலக்குடன் இருக்கிறார்.
"கல்வி அமைச்சின் தலைமையகத்தில் நான் பணியாற்றியது கற்றலின் வருங்காலத்தை அறிந்துகொள்ள வகைசெய்தது. அதன் மூலம் புதிய அம்சங்களைச் சோதித்துப் பார்த்து அவற்றின் வாயிலாக அனுபவம் பெற்று சம்பந்தப்பட்ட முறைகளை மேம்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளமுடிந்தது," என்றார் 48 வயது திரு சூரஜ்.

