செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ab85588e-f219-4d67-9728-a49c264265ab
-

ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பெற்றோரைத் தேடும் மலேசியர்

ஆறு ஆண்டுகளாகத் தன்னைப் பெற்றவர்களை சிங்கப்பூரில் தேடி வருகிறார் மலேசியாவைச் சேர்ந்த ஒரு மாது.

63 வயது நஸ்லி அப்துல்லா 1959ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். பிறந்தவுடன் மலேசியாவின் கோத்தா பாரு நகரில் உள்ள ஜாலான் தெலிபோட் பகுதியில் அண்டை வீட்டாரிடம் தத்துக்கொடுக்கப்பட்டார்.

திருவாட்டி நஸ்லியின் உண்மையான தந்தையின் குடும்பப் பெயர் செயா என்று இவரின் மறைந்த வளர்ப்புத் தந்தைக்கு வேலை செய்த ஒருவர் கூறியிருக்கிறார். இவரைத் தத்துக்கொடுத்த பிறகு பெற்றோர் அவர்கள் வசித்து வந்த கிராமத்திலிருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

"எனது பூர்வீகத்தை ஒருவழியாகத் தெரிந்துகொள்ள முற்படுகிறேன். எனது வளர்ப்புப் பெற்றோரும் உறவினர்களும் உயிருடன் இருந்தபோது 2016ஆம் ஆண்டுக்கு முன்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்," என்றார் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வாழும் திருவாட்டி நஸ்லி.

தான் ஒரு வளர்ப்பு மகள் என்பது திருவாட்டி நஸ்லிக்கு 25 வயதில்தான் தெரியவந்தது.

'சீனாவில் இதுவரை புதிய வகை

கொவிட்-19 கிருமி உருவாகவில்லை'

கொவிட்-19 கட்டுப்பாடுகளை திடீரென கைவிட்டதால் சீனாவில் கிருமிப் பரவல் மோசமடைந்துள்ளது. அதனால் அந்நாட்டில் கூடுதல் வீரியம் கொண்ட கொவிட்-19 கிருமி வகைகள் உருவாகக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இப்போதைக்கு சீனாவில் புதிய கிருமி வகைகள் தலைதூக்கவில்லை என்கின்றனர் சிங்கப்பூரின் சுகாதார வல்லுநர்கள் சிலர். எனினும், விரைவில் அந்நிலை உருவாகலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், பயப்படும் அளவிற்கு மோசமான கொவிட்-19 கிருமி வகை ஏதும் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் வல்லுநரான துணைப் பேராசிரியர் சூ லீயாங், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் ஆலோசகரான பேராசிரியர் பால் தம்பையா உள்ளிட்டோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இந்த விவரங்களைத் தெரிவித்தனர்.

உச்சத்தைத் தொட்ட வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள்

பல வாகனப் பிரிவுகளில் இவ்வாண்டு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் இதுவரை பதிவாகாத உச்சத்தைத் தொட்டுள்ளன. எனினும், அடுத்த ஆண்டு பிற்பாதியில் நிலைமை சற்று சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலான வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும்போது கட்டண உயர்வு மெதுவடையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வகை வாகனங்களுக்கு வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் நான்கில் கட்டணங்கள் இதுவரை இல்லாத அளவு அதிகமாகப் பதிவாயின.

பெரிய, கூடுதல் சக்திவாய்ந்த வாகனங்களுக்கான பிரிவு, மோட்டார்சைக்கிள்கள் பிரிவு, வர்த்தக வாகனங்கள் பிரிவு, பொதுப் பிரிவு ஆகியவற்றில் சான்றிதழ் கட்டணங்கள் இவ்வாண்டு அதிகம் பதிவாயின.