தனியார் வீடுகளின் விலை உயர்வின் விகிதம் அடுத்த ஆண்டு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்குவதற்கான செலவு அதிகமாக இருப்பது, பொருளியல் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது உள்ளிட்டவை அதற்கான காரணங்கள்.
வீட்டு வாடகைச் சந்தை வலுவாக உள்ளது. விற்கப்படாத வீடுகளும் அதிகம் இருக்கின்றன.
அப்படி இருந்தும் தனியார் வீட்டுச் சந்தை அடுத்த ஆண்டு சவால்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் வட்டி விகிதம் கூடி வருவது, வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் தனியார் வீட்டுச் சந்தை பாதிக்கப்படக்கூடும்.
தனியார் வீடுகளின் விலை அடுத்த ஆண்டு ஒன்றிலிருந்து ஐந்து விழுக்காடு அதிகரிக்கும் என்று கவனிப்பாளர்கள் முன்னுரைத்துள்ளனர்.
இந்த ஆண்டு முழுவதும் தனியார் வீடுகளின் விலை ஒன்பது விழுக்காடு உயரும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
தனியார் வீட்டு வாடகையைப் பொறுத்தவரை ஆண்டுக்காண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் விலை 20.8 விழுக்காடு கூடியது.
அடுத்த ஆண்டும் வாடகை விலை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர்வான வீட்டு அடமானச் செலவுகள், சொத்து வரிக் கட்டணங்கள் ஆகியவற்றால் வரும் சுமையை வீட்டு உரிமையாளர்கள் வாடகையோடு இணைப்பதே இதற்குக் காரணம்.
தனியார் வீட்டு வாடகை அடுத்த ஆண்டின் முற்பாதியில் தொடர்ந்து அதிகரித்து உச்சத்தைத் தொட்ட பிறகு சற்று சீராகலாம் என்றும் கூறப்படுகிறது.

