நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் உரை
சிங்கப்பூரின் 2023 வரவுசெலவுத் திட்டம் வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கலாகும்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் திட்டத்தைத் தாக்கல் செய்வார். வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொலைக்காட்சி, வானொலியில் நேரடியாக ஒளி, ஒலிபரப்பப்படும்.
திட்டம் தாக்கலாவதை நேரடியாக www.singaporebudget.gov.sg என்ற இணையத்தளத்தில் காணலாம். நிதி அமைச்சர் மன்றத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும் முழு வரவுசெலவுத் திட்ட அறிக்கையும் சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்ட இணையத்தளத்தில் வெளியாகும்.
நிதி அமைச்சின் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் முக்கியமான வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள் உடனுக்குடன் இடம்பெறும்.
ரீச் அமைப்பின் பட்ஜெட் 2023 இணையத்தளத்தில் அல்லது ரீச் அமைப்பின் ஒலிவழிகளில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
அவர்கள் 2023 ஜனவரி 13ஆம் தேதி வரை www.reach.gov.sg/budget2023 என்ற முகவரியில் தங்கள் யோசனைகள், கருத்துகளைத் தெரியப்படுத்தலாம்.
மக்கள் கழகம், அதன் அடித்தள அமைப்புகளுடன் சேர்ந்து பொதுமக்களை மெய்நிகர் ரீதியில் ஈடுபடுத்தி கருத்துகளையும் யோசனைகளையும் திரட்டுவதற்கான ஏற்பாடுகளையும் நிதி அமைச்சு செய்து இருக்கிறது.
ஆண்டுதோறும் வரவுசெலவுத் திட்ட நடைமுறை, ஏப்ரலில் நிதி ஆண்டு தொடங்கும்போது தொடங்கிவிடும்.
ஆண்டு முழுவதும் நிதி அமைச்சுக்குள்ளும் இதர அமைப்புகளும் பலவற்றையும் விவாதிக்கும்.
பிறகு அந்த விவாதிப்புகள் இணையம், இதர வழிகளில் பொதுமக்கள் கலந்து ஆலோசிக்க திறந்துவிடப்படும். வரவுசெலவுத் திட்டம் தாக்கலாகும்போது அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவும் தாக்கலாகும்.
மன்றம் வரவுசெலவுத் திட்டத்தை விவாதிக்கும். உறுப்பினர்களுக்குப் பதிலளித்து நிதி அமைச்சர் விவாதத்தை முடித்துவைத்து உரையாற்றுவார். பிறகு ஒவ்வொரு அமைச்சுக்கான திட்டங்களை நாடாளுமன்றம் பரிசீலிக்கும்.
அது முடிந்ததும் நிதி அமைச்சர் நிதி ஒதுக்கீட்டு மசோதாவை இரண்டாவது, மூன்றாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்வார். அதன்பேரில் வாக்கெடுப்பு நடக்கும்.
மசோதாவிற்கு அதிபர் சம்மதம் வழங்கினால் அது நிதி ஒதுக்கீட்டுச் சட்டமாக நடப்புக்கு வரும்.
அந்தச் சட்டம், வரும் நிதி ஆண்டில் அரசாங்கத்தின் செலவினத்தைக் கட்டுப்படுத்தும்.

