ரைஃபிள் ரேஞ்ச் ரோட்டில் செவ்வாய்க்கிழமை பாரந்தூக்கியில் இருந்து இயந்திரம் சரிந்து விழுந்ததில் அதில் சிக்கி லை சியோவ், 31, என்ற ஆடவர் மாண்டுவிட்டார்.
அவருக்கு அடுத்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடக்கவிருந்தது. திருமணம் முடிந்ததும் கிம் மோவில் புதிய பிடிஓ வீட்டில் அவர் குடியேறவிருந்தார்.
அவர் ஆர்சிஎம் ரிசோர்சர்ஸ் என்ற ஊழியர் விநியோக நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
கிம் மோவில் அந்த ஆடவரின் ஈமச்சடங்குகள் நேற்று நடந்தன. அதில் அவருடைய உறவினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 62 வயது ஆடவர் ஒருவர் கைதாகி இருப்பதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.
இந்த ஆண்டில் திரு லை சியோவ்வையும் சேர்த்து வேலையிடங்களில் மொத்தம் 45 பேர் மாண்டு இருக்கிறார்கள்.
வேலையிட மரணங்களை முற்றிலும் தீவிரமாக அதிகாரிகள் புலன் விசாரணை நடத்த இயலும் என்று தங்கள் குடும்பம் நம்புவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இங்கு பாதுகாப்பு கலாசாரம் பற்றாக்குறையாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்திருப்பதாக குறிப்பிட்ட திரு சியோவின் சகோதரியான திருவாட்டி ருத் சியோவ், 33, வேலையிட விபத்துகளில் சிக்கிவிடுவோரின் குடும்பங்களுக்கு அதிக ஆதரவு தேவை என்றார்.
"விபத்துகள் நிகழத்தான் செய்யும். ஆனால், அது ஏன் நிகழ்ந்தது என்ற கேள்வி நம் மனதில் உதிக்க வேண்டும். அத்தகைய விபத்துகளை ஏன் தவிர்க்க முடியவில்லை என்பதை தெரிந்துகொள்ள நாம் விரும்ப வேண்டும்.
"கண் மூடி கண் திறப்பதற்குள் இத்தகைய விபத்துகள் நிகழ்ந்துவிடுகின்றன. வேலையிடப் பாதுகாப்பு பற்றி ஒவ்வொருவரும் மேலும் புரிந்துணர்வுடன் திகழ வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே நாம் விரும்புகிறோம்," என்று அவர் தெரி வித்தார்.

