ஜிஎஸ்டி, இதர செலவுகளைச் சமாளிக்க ஜனவரி முதல் உதவிக்கரம்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளில் வசிக்கின்ற சுமார் 950,000 குடும்பங்களுக்கு ஜனவரி மாதம் முதல் பயனீட்டுக் கட்டணக் கழிவுகள் கிடைக்கும்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து இருப்பதைச் சமாளிக்க அரசாங்கம் உதவிக்கரம் நீட்டிவருகிறது.
அதன் ஒரு பகுதியாக குடும்பத்திற்கு $190 வரை கட்டணக் கழிவு கிடைக்கும். ஜிஎஸ்டி வரி, இதர வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட இதை குடும்பங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தக் கழிவு, ஜிஎஸ்டி வரி பற்றுச்சீட்டு, பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி வடிவில் கிடைக்கும். கட்டணக் கழிவு ஒவ்வொரு நிதிஆண்டிலும் காலாண்டுதோறும் கொடுக்கப்படும். அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களில் கிடைக்கும்.
தகுதி பெறுகின்ற குடும்பங்களுக்கு, 2023 மார்ச் மாதம் முடிவடையும் இப்போதைய நிதியாண்டில், வழக்கமாகக் கிடைக்கக்கூடிய பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடியைப் போல் இரண்டு மடங்கு கழிவு கிடைக்கும்.
வீவக ஓரறை, ஈரறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் ஆக அதிகமாக $190 கட்டணக் கழிவைப் பெறும். இது, மூவறை வீடுகளில் வசிப்போருக்கு $170 ஆக இருக்கும் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
வீவக நான்கறை வீட்டில் வசிக்கும் தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் $150 பெறுவார்கள். ஐந்தறை வீட்டில் வசிப்போர் $130 கழிவும் எக்சகியூட்டிவ் அல்லது பல தலைமுறை வீட்டில் வசிப்போர் $110 கழிவும் பெறுவர்.
ஓரறை, ஈரறை வீட்டில் வசிக்கும் சராசரி குடும்பங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்குக் கிடைக்கும் கட்டணக் கழிவைக்கொண்டு சுமார் 10 மாதக் காலத்திற்கான பயனீட்டுச் செலவை ஈடு செய்துவிடலாம்.
மூவறை, நாலறை வீடுகளில் வசிப்போர் நான்கு முதல் ஆறு மாதக் காலத்திற்கான கட்டணத்தைச் சமாளித்துவிடலாம்.
பயனீட்டுக் கட்டணக் கழிவுகள் எஸ்பி சர்வீசஸ் நிறுவனம் நிர்வகிக்கும் பயனீட்டுக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடும்.
ஓரறை முதல் ஐந்தறை வரைப்பட்ட வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்குச் சேவை, பயனீட்டுக் கட்டணங்களில் 0.5 மாத ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுக் கழிவு கொடுக்கப்படும்.
இது, நகர மன்றங்கள் நிர்வகிக்கும் சேவை, பராமரிப்புக் கட்டண கணக்குகளில் ஜனவரியில் வரவு வைக்கப்பட்டுவிடும்.
ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தை நிரந்தர உதவித் திட்டமாக அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. அதோடு மட்டுமின்றி உத்தரவாத உதவித் திட்டமும் நடப்பில் உள்ளது.
இதன் ஒரு பகுதியாகத்தான் பயனீட்டு, பராமரிப்புக் கட்டணக் கழிவுகள் கொடுக்கப்படுகின்றன.
அரசாங்கத்தின் உத்தரவாத உதவித் திட்டம் 2020ல் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. இந்த உதவித் திட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் $1.4 பில்லியன் தொகை சேர்க்கப்பட்டது.
சிங்கப்பூரில் வரும் ஜனவரி மாதம் முதல் ஜிஎஸ்டி வரி 7%லிருந்து 8% ஆக உயர்கிறது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உத்தரவாத உதவித் திட்டத்தில் மொத்தம் $8 பில்லியன் போடப்பட்டு உள்ளது.

