சர்க்கரை இல்லாத அல்லது மிகக் குறைந்த அளவு சர்க்கரை கலந்துள்ள, உடல் நலனுக்கு உகந்த பானங்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள்.
ஊக்கமூட்டும் இந்தப் போக்கு விரிவடைகிறது. அத்தகைய பானங்கள் தரங்களுடன் விற்பனைக்கு வரவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் புதிய விதிகள் நேற்று நடைமுறைக்கு வந்தன.
இதையடுத்து உடல் நலனுக்கு ஏற்ற, ஊட்டச்சத்து அதிகமாக இருக்கின்ற அதிக வகை பானங்கள் விற்பனைக்கு வரும்.
சர்க்கரை குறைவாக கலந்துள்ள, கெட்ட கொழுப்பு குறைவாக இருக்கின்ற பானங்கள் ஏ என்றும் பி என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. இவை உடல் நலனுக்கு நல்லவை.
இவற்றின் விற்பனை 2017ல் 37% ஆக இருந்தது. ஆனால் 2021ல் இடம்பெற்ற எல்லா விற்பனைகளையும் பார்க்கையில், இவற்றின் விகிதம் 71% ஆக அதிகரித்து உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அரசாங்கம் 2019ல் சத்து தரக் குறியீடு பற்றி அறிவித்தது. அதன்படி பானங்கள் ஏ, பி, சி, டி என்று வகைப்படுத்தப்படுகின்றன.
உடனே பிழிந்து விற்கப்படும் பழச்சாறு, டப்பியில் அடைத்து விற்கப்படும் பழச்சாறு, பால், தயிர், பான மாவுப் பொருள்கள் முதலா னவை இவற்றில் அடங்கும்.
சந்தையில் இப்போது விற்கப்படும் பானங்களில் ஐந்தில் ஒன்றில் உடல் நலனுக்கு உகந்தது என்ற முத்திரை இருக்கிறது. அவை ஏ, பி வகையைச் சேர்ந்தவை.
அடைத்து விற்கப்படும் பானங்களில் சத்துப்பொருள் பற்றிய விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதியும் விளம்பரக் கட்டுப்பாடுகளும் நேற்று நடப்புக்கு வந்தன.
இவை உடனே பிழிந்து விற்கப்படும் பானங்களுக்கும் பொருந்தும் வகையில் 2023 முடிவில் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் பொதுவாக சி, டி ரக பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஏ, பி ரக பானங்களை, உடல் நலனுக்கு உகந்தது என்ற முத்திரை உள்ள பானங்களை நாட வேண்டும்.
அல்லது தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்படுகிறது.

