பருவநிலை மாற்றங்களைச் சமாளிக்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை முன்னெடுக்கத் தோதாக சுற்றுச்சூழல் அதிகாரி அலுவலகம் என்ற அமைப்பு முதன்முதலாக அமைவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த அலுவலகம், அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டவட்டமான சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு வடிவம் கொடுக்கும்.
ஐநா அமைப்பு தீட்டி இருக்கும் 2030 சுற்றுக்சூழல் மேம்பாட்டு செயல்திட்டத்தில், பாரிஸ் உடன்பாட்டில் சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாட்டை அது பலப்படுத்தும். அறவே கரிமக் கழிவு இல்லாத நிலையைச் சாதிக்க அது சிங்கப்பூரை தயார்படுத்தும்.
அரசாங்க முதலாவது சுற்றுச்சூழல் அதிகாரியாக லிம் துவாங் லியாங் 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் பொறுப்பு ஏற்பார். அவர், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் துணைச் செயலாளராகவும் (சிறப்புப் பணிகள்) நியமிக்கப்படுவார்.
திரு லிம், இப்போது இந்த அமைச்சில் அறிவியல் தொழில்நுட்பத் தலைமை அதிகாரியாக இருக்கிறார். இந்தப் பதவியைக் கைவிட்டு திரு லிம் புதிய பொறுப்பை ஏற்பார்.
அரசாங்க சுற்றுச்சூழல் அதிகாரி அலுவலக தலைவர் என்ற முறையில் திரு லிம் சிங்கப்பூரின் பசுமைத் திட்டம் 2030 போன்ற சுற்றுச்சூழல் திட்டங்களை முன்னெடுப்பார் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

