திருவாட்டி ராஜலிங்கம் லெட்சுமி, 82, என்பவரின் புதல்வர் திரு ஜெகன்நாதன் ராஜேந்திரன் திருமணம் புரிந்து மனைவி யுடன் சேர்ந்து தஞ்சோங் பகாரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி அதில் வசித்து வந்தார்.
அத்தம்பதிக்கு சங்கர் என்ற ஆண் மகன் பிறந்தார். சங்கர் தவழும் குழந்தையாக இருந்தபோது கணவரிடம் கோபித்துக்கொண்டு சங்கரின் தாயார், குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
பிறகு மணவிலக்கு நடைமுறைகள் பூர்த்தியாயின. அதையடுத்து தஞ்சோங் பகார் வீடு திரு ஜெகன்நாதனுக்கு சொந்தமானது என்று 2005 ஏப்ரலில் முடிவானது.
இப்படி இருக்கையில், 2019 ஜூலை 30ஆம் தேதி இரவு நேரத்தில் திரு ஜெகன்நாதன் போக்குவரத்து விபத்து ஒன்றில் சிக்கிவிட்டார். அடுத்த நாள் அதிகாலையில் மருத்துவமனையில் அவர் மாண்டார். உயில் எதையும் அவர் எழுதவில்லை.
திரு சங்கருடன் 2019 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடர்புகொண்ட அவரின் உறவினர் ஒருவர், திரு சங்கரின் தந்தை மரணமடைந்துவிட்டதாக மரண விளம்பரம் வெளியாகி உள்ளது என்று கூறினார்.
அதையடுத்து தன் தந்தையின் சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை தனக்கே கொடுக்க வேண்டும் என்று கோரி திரு சங்கர் மனு செய்தார்.
$450,000 மதிப்புள்ள தஞ்சோங் பகார் வீடு, சுமார் $120,800 பணத்துடன் கூடிய பிஓஎஸ்பி கணக்கு, $55,000 கூடிய ஓசிபிசி கணக்கு ஆகியவை திரு ஜெகன்நாதனின் சொத்துகளில் அடங்கும்.
இப்படி இருக்கையில், திருவாட்டி ராஜலிங்கம் லெட்சுமி, தன் பேரனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
தன் மகனான ஜெகன்நாதனின் தஞ்சோங் பகார் வீடு தனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று அந்த முதிய மாது கோரிக்கை விடுத்தார்.
அந்த மாதுக்கு ஜூரோங் ஈஸ்ட்டில் அடுக்குமாடி வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டில் தன் இதர பிள்ளைகளை தங்க அந்த மாது அனுமதித்தார். அந்த வீடு தனது மகளுக்குச் சேர வேண்டும் என்று உயிலும் எழுதி வைத்துவிட்டார்.
இவற்றைச் செய்துவிட்டு அந்த மாது தன் மகனின் தஞ்சோங் பகார் வீட்டில் வசித்து வந்தார்.
"என்னுடைய மகன் ஜெகன்நாதன் 2005லிருந்து 2019 வரை திரும்பத் திரும்ப பல தடவை என்னிடம் சொல்லி இருக்கிறார். உங்களுக்கு முன் நான் இறந்துவிட்டால் இந்த வீடு உங்களுக்குத்தான் என்று என்னிடம் என் மகன் அடிக்கடி கூறி இருக்கிறார்.
"என் மகனின் வீட்டை என் வீடு போல் நினைத்து அதைப் புதுப்பித்து மேம்படுத்த $25,000 செலவிட்டு இருக்கிறேன்.
"என் மகனை நான் கவனித்துக் கொண்டேன். குடும்பச் செலவுகளையும் நான் பார்த்துக்கொண்டேன். வீட்டு வேலை களையும் செய்து வந்தேன்.
"தஞ்சோங் பகார் வீடு எனக்குத்தான் என்று என்னுடைய மகன் என்னிடம் திரும்பத் திரும்ப சொன்னதை நம்பி ஜூரோங் ஈஸ்ட் வீட்டையும் நடைமுறையில் கைவிட்டுவிட்டேன்.
"ஆகையால், தஞ்சோங் பகார் வீடு எனக்குத்தான் சேர வேண்டும்," என்று திருவாட்டி ராஜலிங்கம் லெட்சுமி வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முறை யிட்டார்.
திரு சங்கர் ராஜேந்திரனுக்கு, 26, எதிராக 2021ல் தொடுத்த வழக்கில் முதலில் சார்ல்ஸ் இயோ என்ற வழக்கறிஞரை திருவாட்டி ராஜலிங்கம் லெட்சுமி நியமித்து இருந்தார்.
ஆனால், அந்த வழக்கறிஞர் 2022 ஆகஸ்ட்டில் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அதையடுத்து வழக்கில் அந்த முதிய மாதின் சார்பில் வழக்கறிஞர் ராஜ்வின் சிங் சாந்து என்பவர் முன்னிலையானார்.
திருவாட்டி ராஜலிங்கம் லெட்சுமி இப்படி முறையிட, பேரனான திரு சங்கர், தன் பாட்டியை எதிர்த்து வாங் லியான்ஷெங் என்ற வழக்கறிஞரை அமர்த்தி எதிர்வாதம் புரிந்தார்.
திரு ஜெகன்நாதன், தன் தாயாரிடம் தஞ்சோங் பகார் வீடு தொடர்பில் கூறி வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திரு சங்கர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் வாதிட்டார்.
அப்படியே திரு ஜெகன்நாதன் கூறியிருந்தாலும் அதனால் திருவாட்டி ராஜலிங்கத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றாரவர்.
அதோடு மட்டுமின்றி, தன்னுடைய பாட்டி தன் தந்தையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஏறக்குறைய $181,000 பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் திரு சங்கர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி லீ சியு கின், இரண்டு பேரின் வாதங்களையும் தள்ளுபடி செய்துவிட்டார்.
"தஞ்சோங் பகார் வீட்டைப் பொறுத்தவரை உயில் இல்லா வாரிசு சட்டத்தின்கீழ் அந்த வீட்டிற்குத் திரு சங்கர்தான் முழு உரிமையாளர்.
"அதேவேளையில், தன் மகனின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்ததன் மூலம் திருவாட்டி ராஜலிங்கம் லெட்சுமி நியாயமற்ற முறையில் எந்த வசதியையும் பெற்றுவிடவில்லை.
"தஞ்சோங் பகார் வீட்டைப் புதுப்பிக்கவும் பழுது பார்க்கவும் $25,000 செலவிட்டு இருப்பதாக திருவாட்டி ராஜலிங்கம் லெட்சுமி கூறுகிறார். ஆனால், இதை மெய்பிக்க போதிய சாட்சியம் இல்லை.
"திருவாட்டி ராஜலிங்கம் லெட்சுமி தன்ஜூரோங் ஈஸ்ட் வீட்டில் தன் இதர பிள்ளைகள் வசிக்க அனுமதித்து அந்த வீட்டை தன்னுடைய ஒரு மகளுக்கு உயில் எழுதி வைத்து இருக்கிறார். இப்படி செய்ததால் மட்டும் அந்த வீட்டை அந்த மாது கைவிட்டுவிட்டதாக பொருள் ஆகாது.
"திருவாட்டி ராஜலிங்கம் லெட்சுமி தன்மகனின் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்தபோது திரு ஜெகன்நாதனின் சொத் துகளை நிர்வகிப்பவராக திரு சங்கர் நியமிக்கப்படவில்லை. ஆகையால், பணத்தை எடுக்கவோ, மறுக்கவோ திரு சங்கருடைய அனுமதி அப்போது தேவையில்லை," என்று தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.

