ஜயண்ட் பேரங்காடிகளில் குறிப்பிட்ட 700 அத்தியாவசிய பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 2023ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்கு அவற்றை பழைய ஜிஎஸ்டி வரியுடன் (7%) வாங்கிக்கொள்ளலாம். அந்தப் பொருள்களுக்கு 8% ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) 2023 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 7 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காட்டுக்கு உயரும் என்றும் எல்லாரும் அறிந்ததே.
அந்த 700 அத்தியாவசிய பொருள்களில் இரண்டு குழாய்களுக்கு $4 என்று விற்கப்படும் டார்லி ஃபிரஷ்'என் பிரைட் பற்பசை, $3.10க்கு விற்கப்படும் சிம்ப்லி லிவிங் பாத்திரம் கழுவும் மூன்று பஞ்சுகள், $2க்கு விற்கப்படும் ஐந்து ராயல் காலா ஆப்பிள்கள், $1க்கு விற்கப்படும் 60 கிராம் உருளைக் கிழக்கு வறுவல்கள் போன்றவை அடங்கும்.
சில அத்தியாவசிய பொருள்களைக் கட்டுப்படியாகும் விலைகளில் விற்பதில் தாம் கடப்பாடு கொண்டிருப்பதாக ஜயண்ட் பேரங்காடிகளை நிர்வகிக்கும் டிஎஃப்ஐ ரீட்டெல் குழுமம் நேற்று தெரிவித்தது.
2020ல் தொடங்கப்பட்ட 'லோவர் பிரைசஸ் தெட் லாஸ்ட்' இயக்கத்தின் மூலம் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது என்று கூறிய டிஎஃப்ஐ குழுமம், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மளிகைப் பொருள்கள், தனிநபர் அழகு பராமரிப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள், புதிய பொருள்கள் ஆகியவற்றில் விலையை நிலையாக வைத்திருக்க இந்த இயக்கத்தை 2020ல் தொடங்கப்பட்டது என்றது.
சிங்கப்பூரில் தனது நிர்வாகத்தில் உள்ள 50 ஜயண்ட் பேரங்காடிகள், மூத்த குடிமக்கள் விலைக் கழிவு திட்டத்தையும் தொடரும் என்று கூறியது.
அதன் மூலம் வார நாள்களில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், நிரந்தரவாசிகள் ஆகியோர் வாங்கும் பொருள்களுக்கு 3% விலைக் கழிவு வழங்கப்படும் என்றும் டிஎஃப்ஐ குழுமம் கூறியது.
இந்தக் விலைக் கழிவுத் திட்டம் இந்த ஆண்டில் தொடங்கப்பட்டது.
"இத்திட்டம், சிங்கப்பூரில் அதிக பாதிப்புக்குள்ளாகும் பிரிவினர் வார நாள்களில் அமைதியான மனத்துடன் தங்களுக்கு வேண்டிய பொருள்களை 2023லும் வாங்க வகை செய்கிறது," என்றும் டிஎஃப்ஐ குழுமம் விவரித்தது.
"2023ல் ஜிஎஸ்டி அதிகரிப்பும் பொருளியல் நிலையற்றத்தன்மையும் சிங்கப்பூரர்கள் பலருக்கு வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்கள் செலவுகளை மேலும் குறைக்க பல வழிகளை நாடுகின்றனர்," என்றார் டிஎஃப்ஐ குழுமத்தின் தென்கிழக்காசியாவுக்கான உணவு, சொந்த வர்த்தக சின்னப் பிரிவின் சந்தைப்படுத்துதல் இயக்குநர் லீ யிக் ஹுன்.
"கூடுதல் ஜிஎஸ்டி வரிக்கால விலக்கை அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதன் மூலம் மூத்த குடிமக்கள் உட்பட சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் செலவுகளை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்ளலாம்," என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு லீ.

