பணமோசடி தொடர்பான குற்றங்களைப் புரியும் ஒரு கும்பலுக்கு உதவி செய்த மூவர் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் அந்தக் கும்பலின் $5.4 மில்லியன் மதிப்புள்ள குற்றச் செயல்களுக்கு அவர்கள் மூவரும் உடந்தையாக இருந்தனர் என்றும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மூவரில் ஒருவரான முகம்மது அமிருலட்லி செலாமட், $5.1 மில்லியன் மதிப்புள்ள மோசடியிலிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர் மீது ஏமாற்றுதல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளும் முறைகேடான கணினிப் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அமிருலின் நண்பர் ஒருவர், வங்கிக் கணக்குகளைத் திறந்து, அவற்றின் செயல்பாட்டைத் தன்னிடம் விட்டுவிடுமாறும் அதற்கு அமிருலுக்குப் பணம் தருவதாகவும் கூறினார்.
அதன்படி, அமிருல் யுஓபி, ஓசிபிசி வங்கிகளில் கணக்குகளைக் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி திறந்து, வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை நண்பரிடம் பகிர்ந்துகொண்டார். அதற்கு அமிருலுக்கு $100 கொடுக்கப்பட்டது.
இந்த இரு வங்கிக் கணக்குகளில் வைத்து பணமோசடிகளிலிருந்து பெறப்பட்ட $550,000க்கு மேற்பட்ட தொகை சேமிப்பாக வைக்கப்பட்டது.
அமிருல் தனது மனைவியின் சிங்பாஸ் பற்றிய விவரங்களையும் அந்த நண்பருடன் பகிர்ந்துகொண்டார். அதற்கு அவருக்கு மேலும் $100 கொடுக்கப்பட்டது.
"இந்த மோசடிக் கும்பல் பொய்யான ஒரு நிறுவனத்தின் தகவல்களைப் பதிவுசெய்து ஒரு டிபிஎஸ் பெருநிறுவன வங்கிக் கணக்கைத் திறந்தது. எச்எஸ்பிசி, சிஐஎம்பி, யுஓபி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய மேலும் நான்கு வங்கிகளிலும் அமிருல் தனது மனைவியின் சிங்பாஸ் விவரங்களைக் கொண்டு மனைவியின் பேரில் கணக்குகளைத் திறந்தார்," என்று காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அந்தக் கணக்குகளில் பணமோசடிகளிலிருந்து பெறப்பட்ட $4.6 மில்லியன் தொகை வைப்பு வைக்கப்பட்டது. அமிருலின் வழக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு வழக்கில் தொடர்புடைய இருவர் மீது நேற்று நிதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் 23 வயது ஜேம்ஸ் டான் சிமோ, 25 வயது முகம்மது நயிஃப் வாஹீத் அப்டல்லா. அவர்கள் ஒவ்வொருவர் மீதும் முறை கேடான கணினிப் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் தனது சிங்பாஸ் விவரங்களைத் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தெரிவித்து அதற்கு சன்மானமாக $250 பெற்றார்.
இந்தக் குற்றத்தைப் புரிய டான் நயிஃப்பை வற்புறுத்தினார் என்றும் அதற்காக டானுக்கு $500 சய்மானம் வழங்கப்பட்டது என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறின.
எளிதில் பணம் சம்பாதிக்க டெலிகிராம் தளத்தில் வந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட நயிஃப், டானுடன் தொடர்புகொண்டார். டான் அவரது சிங்பாஸ் விவரங்களைத் தன்னிடம் தெரிவிக்குமாறு வற்புறுத்தினார் என்று காவல்துறை விவரித்தது.
"மோசடிக் கும்பல் நயிஃப்பின் சிங்பாஸ் விவரங்களைக் கொண்டு எச்எஸ்பிசி, யுஓபி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய வங்கிகளில் கணக்குகளைத் திறந்தது.
"இந்த வங்கிக் கணக்குகளில் பணமோசடிகளிலிருந்து பெறப்பட்ட $$267,000க்கு மேற்பட்ட தொகை சேமிப்பாக வைக்கப்பட்டது," என்று காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த இருவரது வழக்குகள் ஜனவரி 13ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

