அனுஷா செல்வமணி
நகைச்சுவையுடன் பல திருப்பங்களைக் கொண்ட திகில் திரைப்படம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளூர் திரையரங்கில் கூடிய விரைவில் திரையிடப்படவுள்ளது.
'பிரெஞ்சு டவுன்' என்ற இந்தப் படம், 'செர்ட்டிஃபைய்ட் ராஸ்கல்ஸ்' எனும் பிரபல உள்ளூர் யூடியூப் ஒளிவழி வழங்கவிருக்கும் படமாகும்.
இதற்கு முன்னர், குறும்படங்களை மட்டுமே தயாரித்து வந்த இந்த ஒளிவழி, பெரியளவில் தனது முதல் திரைப்படத்தை வெளியிடுகிறது.
ஓரு நிறுவனத்தில் பணிபுரியும் சிலர், வேலை விடுப்புக்கு வெளியே செல்லும் சமயத்தில், எதிர்பாராத சம்பவங்களை எதிர்நோக்குவதையும் அதிலிருந்து வெளிச்சத்துக்கு தெரியவரும் அவர்களின் உண்மை களையும் ரகசியங்களையும் மையமாகக் கொண்டது இந்தத் திரைப் படம்.
செர்ட்டிஃபைய்ட் ராஸ்கல்ஸ் யூடியூப் ஒளிவழியின் கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்த இந்தப் படம், சிங்கப்பூரிலும், தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரிலும் எடுக்கப்பட்டது.
சிறுவர்களிலிருந்து, பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் விதமாக இருக்கும் இந்த 80 நிமிடப் படத்தில், ஒரு பாடல் இடம்பெறுகிறது.
படத்தின் கதை, பார்வையாளர்கள் தங்களைச் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் வகையில் இருக்கும் என்று கூறுகிறார் படத்தின் இயக்குநரான திரு அரவிந்த் சந்திரசேகரன், 42.
படத்தில் நடித்திருந்த ரிதுமிதா சரவணன், 26, "இதுவரை பல குறும்படங்களில் நான் நடித்திருந்தாலும், இது எங்களுடைய முதல் திரைப்படம் என்பதால் எனக்கு மிக உற்சாகமாக இருக்கிறது," என்றார்.
படத்தின் விநியோகிப்பாளரான மாஸ்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு கார்த்திக் அழகப்பன், 39, "இந்த படத்தின் சிறப்புத் திரையீட்டை பார்த்த எனக்கு, படத்தில் இடம்பெறும் ஆழமான கருத்துகள் மிகவும் பிடித்திருந்தன.
"படத்தில் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் படத்தின் உள்ளடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது," என்றார்.
பொதுமக்கள் ஜனவரி ஏழு, எட்டு ஆகிய தேதிகளில் இந்தப் படத்தை கார்னிவல் சினிமாஸ் திரையரங்கில் காணலாம்.
படத்துக்கான நுழைவுச்சீட்டுகளைத் திரையரங்கின் இணையத் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். நுழைவுச்சீட்டின் விலை $12 மட்டுமே.

