மாதங்கி இளங்கோவன்
சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியில் தொழில் கல்வியைக் கற்ற இஸ்மாயில் சுஜப், 30, தன்னுடைய 23வது வயதில் 'பிரிமியம் ஈவென்ட்ஸ்' என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தை 2015ல் தொடங்கினார்.
பல சவால்களையும் சமாளித்து விடாமுயற்சியுடன் ஏறக்குறைய 500 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து சாதனை படைத்தார்.
இந்தச் சாதனைக்காக அவருக்கு சிங்கப்பூர் வணிக வர்த்தகச் சங்கத்தின் விருது கிடைத்தது. 'எஸ்எம்இ 500' என்ற சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான அந்த விருது வழங்கும் விழா சென்ற மாதம் 28ஆம் தேதி நடந்தது. சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு உறுப்பினராகும் வாய்ப்பும் இதன்மூலம் திரு இஸ்மாயில் சுஜப்புக்கு கிட்டியது.
படிக்கும்போதே கலாசார நிகழ்ச்சிகளில் ஈடுபாடு கொண்ட இவர், பள்ளிக்கூட நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டார்.
பிறகு நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமணங்கள் போன்றவற்றுக்கு திட்டமிட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து உதவினார்.
இந்த அனுபவங்களைக் கொண்டு சொந்தமாக நிறுவனத்தைத் தோற்றுவித்த அவர், கொரோனா காலத்தில் பல சவால்களைச் சமாளித்து சூழ்நிலைக்கு ஏற்ற திறமைகளை வளர்த்துக்கொண்டு விவேகமாக உழைத்தார்.
ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமான முறையில் செய்து முடிக்கும் போது வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெறுகிறேன். செய்த பணிக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட அந்தப் பாராட்டு எனக்கு விவரிக்க முடியாத உணர்வையும் மனநிறைவையும் தருகிறது என்று திரு இஸ்மாயில் சுஜப் கூறினார்.

