பிடாடாரி குடியிருப்புப் பேட்டையில் இவ்வாண்டுப் பிற்பாதியில் புதிய உணவங்காடி நிலையம் திறக்கப்படவிருக்கிறது.
உட்லே வில்லேஜ் உணவங்காடி நிலையம், புளோக் 202C உட்லே லிங்கில் அமையும்.
புதிதாகக் கட்டப்படும் உட்லே கடைத்தொகுதி, உட்லே ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு அருகே அது அமைந்திருக்கும். புதிய உணவங்காடி நிலையத்தில் 39 உணவுக் கடைகள் செயல்படும். அங்கு 700க்கு மேற்பட்ட இருக்கைகள் அமைந்திருக்கும் என்று கூறப்பட்டது.
உட்லே வில்லேஜ் உணவங்காடி நிலையத்தை நிர்வகிப்பதற்கான ஏலக்குத்தகைகள் வரவேற்கப்படுவதாக சென்ற மாதம் 16ஆம் தேதி தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்திருந்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பிடாடாரி வட்டாரக் குடியிருப்பாளர்கள் தற்போது குறைவான கடைகளே இருப்பதாகவும் உணவங்காடி நிலையத்தை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகவும் கூறினர்.
இந்தக் குடியிருப்புப் பேட்டை முழுமையாகக் கட்டி முடிக்கப்படும்போது ஏறக்குறைய 10,000 வீடுகள் இங்கு அமைந்திருக்கும். குடியிருப்பாளர் எண்ணிக்கை உயரும்போது உணவு வகைகளின் விலை குறையக்கூடும் என்று எதிர்பார்ப்பதாகச் சிலர் கூறினர்.
இருப்பினும் உட்லே வில்லேஜ் உணவங்காடி நிலையத்தில் ஈரச் சந்தை இடம்பெறாது.
அதுபற்றிக் கவலையில்லை என்கின்றனர் குடியிருப்பாளர்கள் சிலர். கோவன், பெண்டிமியர், அல்ஜுனிட் போன்ற இடங்களில் உள்ள ஈரச்சந்தைகளுக்குச் செல்லலாம் என்பதை அவர்கள் சுட்டினர்.