வாடிக்கையாளர்கள் நேற்று முதல் 'பிரைஸ் காக்கி' கைப்பேசிச் செயலியின் மூலம் பேரங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலையை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
இதில் 1,200க்கு மேற்பட்ட உணவு வகைகள், பானங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றின் விலையைத் தெரிந்துகொள்ளலாம். செயலி, 100 கிராம் அல்லது 100 மில்லிலிட்டர் அளவிலான இப்பொருள்களின் விலையைக் காட்டும் என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் கூறியது.
பால், சமையல் எண்ணெய், 'சாஸ்', பொட்டலமிடப்பட்ட பானங்கள், சவர்க்காரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், சிகைப் பராமரிப்பு பொருள்கள் போன்றவற்றின் விலையை இந்தச் செயலி காட்டும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான முறையில் பொருள்களின் விலை தெரிவதால் அவர்கள் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசிய பொருள்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது எளிதாகும் என்று சங்கம் குறிப்பிட்டது.
வர்த்தகச் செலவுகள் அதிகரிக்கும் நிலையில் சில உற்பத்தியாளர்கள் விலையை ஏற்றாமல் பொட்டலங்களில் பொருள்களின் அளவைக் குறைக்கக்கூடும்.
எனவே 100 கிராம் அல்லது 100 மில்லிலிட்டர் அளவிலான பொருளின் விலையைத் தெரிந்துகொண்டு வாடிக்கையாளர்கள் பொருள்களைத் திட்டமிட்டு வாங்க இயலும்.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் 6,000க்கு மேற்பட்ட பொருள்களுக்கு இவ்வாறு விலையைச் செயலியில் காட்டுவது இலக்கு என்று அது குறிப்பிட்டது.
'பிரைஸ் காக்கி' கைப்பேசிச் செயலியை 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் அறிமுகம் செய்தது.
இதில் தற்போது 10,000க்கு மேற்பட்ட பொருள்களின் விலை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மளிகைச் சாமான்கள், பேரங்காடிகளில் விற்கப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவை இவற்றில் அடங்கும். மேலும் உணவங்காடிகள், உணவுக் கடைகள் ஆகியவை விற்கும் 31,000 சமைத்த உணவு வகைகளின் விலையையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
சென்ற ஆண்டு கூடுதலான வாடிக்கையாளர்கள் உள்ளூர்த் தயாரிப்புகளை நாடுவது தெரியவந்ததாக சங்கம் கூறியது. இப்பொருள்கள் வணிக முத்திரை பெறப்பட்ட அதே பொருள்களைவிட 10 முதல் 25 விழுக்காடு குறைவு என்பதை அது சுட்டியது.

