வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் சிலவற்றுக்கு அருகே இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
உட்லண்ட்ஸ் ரோட்டின் நடைபாதை, சிலேத்தார் லிங்க், நார்த் கோஸ்ட் அவென்யூ போன்ற இடங்களில் சென்ற மாதத் தொடக்கத்தில் ஒவ்வோர் இரவும் வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்தன.
சென்ற மாதம் முழுவதும் கிராஞ்சி லாட்ஜ் 1க்கு அருகே வாகனங்கள் நிறுத்தப்பட்டதைக் காண முடிந்ததாக சன்டே டைம்ஸ் கூறியது.
சில இடங்களில் சாலையின் இருபுறமும் கிட்டத்தட்ட 500 மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் சிரமப்படுவதாகக் கூறியுள்ளனர்.
சில நேரங்களில் பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகிலும் இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூரில் போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குக் கம்பங்கள், நடைபாதைகள், அவற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் புல்வெளிகள், பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றுக்கு அருகே வாகனங்களை நிறுத்துவது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. இத்தகைய குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
உட்லண்ட்ஸ் ரோட்டில் வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்படுவது குறித்து அறிந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவதைக் கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டது.
இவ்விடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் அது கூறியது. சென்ற ஆண்டின் முதல் 11 மாதங்களில் சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்தியது தொடர்பில் 86,036 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக ஆணையம் சொன்னது.

