பணமாற்று வர்த்தக நிறுவனத்தின் மேலாளரிடம் இருந்து 2014ஆம் ஆண்டில் $600,000 கொள்ளை அடித்த பிறகு ஒன்பது பேர் கொண்ட குழு மலேசியாவிற்குத் தப்பியோடியது.
அதில் சிவராம் மணியனும் ஒருவர். சென்ற ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அவர் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அந்த 36 வயது மலேசியருக்கு நேற்று ஏழு ஆண்டுச் சிறைத்தண்டனையுடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இறுதிக் குற்றவாளி இவர்.
முன்னதாக, கும்பலாகக் கொள்ளை அடித்த குற்றத்தை மாவட்ட நீதிமன்றத்தில் சிவராம் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது மேலும் ஒரு குற்றச்செயலும் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
டச்சனா என்பவரிடம் வாங்கிய 10,000 ரிங்கிட் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில், சிவராம் அவருக்குக் கொள்ளையில் உடந்தையாகச் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

