சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கையை குற்றமாக வகைப்படுத்தும் 377ஏ சட்டப் பிரிவை அகற்றுவதற்கு அதிபர் ஹலிமா யாக்கோப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பான மசோதாவிற்கு அவர் சென்ற மாதம் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். அதே நேரத்தில் திருமணத்துக்கான வரையறையை பாதுகாக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ளன.
அரசிதழில் நேற்று வெளியான அறிக்கைகள் இந்தத் தகவல்களைத் தெரிவித்தன.
நாடாளுமன்றம் சென்ற ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி இவ்விரு நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக வாக்களித்தது. இரண்டு நாள்களில் மொத்தம் பத்து மணி நேரத்துக்கு நீடித்த விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற்றது.
விவாதத்தின் முடிவில் திருமணம் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கே உண்டு என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக நீதிமன்றத்தின் கைகளில் இதனை விடுவது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அமையும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
ஓரினச் சேர்க்கையைக் குற்றச் செயலாகக் கருதத் தேவையில்லை என்றும் ஆனால் திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானதே என்றும் அரசாங்கம் பொதுமக்களிடம் நடத்திய கருத்தறியும் நடவடிக்கைகளில் சிங்கப்பூரர்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.