கட்டுமானப் பொருள்களிலும் அறைகலன்களிலும் 'ஃபார்மால்டிஹைடு' எனும் வேதிப்பொருளின் உமிழ்வு வரம்பு குறித்து தொழில் நிறுவனங்கள் அளித்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
காரநெடியுடன் கூடிய அந்த வேதிப்பொருள், உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் துகள்களை வெளியிடுகிறது. அத்துகள்களை அதிக அளவிலும் வெகுகாலமும் சுவாசிக்கும்போது, புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடும்.
உட்புறங்களில் சுவாசிக்கப்படும் காற்றானது தூய்மையாக இருப்பதை உறுதிசெய்வதற்கான 'நீடித்து நிலைக்கத்தக்க வெளிகளுக்கான செயற்கூட்டணி'யின் வழிகாட்டி நெறிமுறைகள், பரிந்துரைகள் அறிமுக நிகழ்ச்சியின்போது அமைச்சர் ஃபூ பேசினார்.
சிங்கப்பூர் தொழில் கூட்டமைப்பு, சிங்கப்பூர் அறைகலன் தொழிலக மன்றம், சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றம் ஆகியவை இணைந்து 2021 நவம்பரில் அந்தச் செயற்கூட்டணியை ஏற்படுத்தின.
விற்பனைக்குமுன் அனைத்துப் பொருள்களுக்கும் உமிழ்வுச் சோதனை அறிக்கைகளை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உமிழ்வு வரம்புகளுக்கு அவை உட்படுகின்றன என்பதற்கான சான்றை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அந்தச் செயற்கூட்டணி பரிந்துரைத்துள்ளது.
மோசமான காற்றோட்ட வசதி மற்றும் காற்றுத்தரம் காரணமாக கொவிட்-19 பரவுவதால், அரசாங்கமும் தொழில் நிறுவனங்களும் அப்பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வழிகாட்டி நெறிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
"கொவிட்-19 பரவலானது நல்ல காற்றோட்டம், சரியான இடைவெளி போன்றவை குறித்து உணரும்படி செய்துள்ளது," என்றார் திருவாட்டி ஃபூ.
மக்கள் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு நேரத்தை உட்புறங்களில் செலவிடுவதால், மோசமான காற்றுத்தரத்தால் அவர்களின் உடல்நலம் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், கூட்டணியின் ஒழுங்குமுறைப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுமுன், எவ்விடங்களில் உமிழ்வுகள் தீங்கு விளைவிக்கும், எவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வரைமுறைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டி இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"எல்லா நேரங்களிலும் தரநிலைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை ஒழுங்குவிதி உறுதிப்படுத்தாது. அதன்பின் சோதனைகளையும் அமலாக்க நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டும்," என்றார் அவர்.
கட்டுமானப் பொருள்கள் மற்றும் உள்ளலங்காரப் பொருள்களுக்கான உமிழ்வு வரம்புகள், உட்புற நல்ல காற்றுத்தரத்திற்கான தரநிலைகளைப் பேணுதல், உட்புறங்களில் நல்ல காற்றுத்தரத்தைப் பேண எடுக்கப்படும் முயற்சிகளுக்கான அங்கீகாரச் சான்றிதழ்கள், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துதல், உட்புறக் காற்றுத்தரத்தைக் கண்காணித்தல் போன்றவை கூட்டணியின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.
குறைந்த உமிழ்வு கொண்ட பொருள்களை உருவாக்கவும் தொழில்துறை-பொதுமக்கள் இடையே சிறந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் ஊக்குவிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

