ரச்சனா வேலாயுதம்
அரை நூற்றாண்டிற்கும் மேலாக, சுற்றுலாத் தலமாக மட்டுமின்றி, எண்ணி மகிழத்தக்க வகையில் மறக்க முடியாத பல அனுபவங்களையும் நினைவுகளையும் அளித்த ஜூரோங் பறவைப் பூங்கா தனது கதவுகளை நிரந்தரமாக மூடிக்கொண்டது.
கடந்த 1971ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்பட்ட ஜூரோங் பறவைப் பூங்கா நேற்று முன்தினம் தனது 52வது பிறந்தநாளுடன் விடைபெற்றது.
இதனையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பறவைகளைக் கொண்டு அங்கு இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் இதுவரை காணாத வகையில் வித்தியாசமாக அரங்கேறின. அவற்றைக் காண மக்கள் திரண்டதால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
பூங்காவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிளிகள் மக்களுடன் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பாடியது எல்லாரையும் வியக்க வைத்தது.
மழை தூறியபோதும் மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல், குடை பிடித்தபடி நிகழ்ச்சிகளை ரசித்தனர். மழை வலுக்கவே, `பேர்ட்ஸ் ஆஃப் பிரே' நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
பூங்காவை மூடப்போவதை நினைத்து கடவுளே அழுகிறார் என்று நகைச்சுவையுடன் கூறினார் நிகழ்ச்சியை வழிநடத்திய திரு சந்திரமோகன்.
பூங்கா மூடப்படுவதை எண்ணி, அதன் பராமரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி, கட்டியணைத்து, கண்ணீர் வடித்தது வந்திருந்த சுற்றுப்பயணிகளையும் கண்கலங்கச் செய்தது.
பறவைப் பூங்கா அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பெற விரும்பி, குடும்பத்தோடு வந்திருந்தார் திரு அனுப் ஜோஸ். திருமணத்திற்குமுன் அங்கு வந்திருந்த திரு அனுப், இம்முறை மனைவியுடனும் ஐந்து மாத கைக்குழந்தையுடனும் வந்திருந்தார்.
தம் வாழ்க்கையின் பல முக்கியத் தருணங்களை அப்பூங்காவுடன் தொடர்புபடுத்திய அவர், "பூங்கா வேறிடத்திற்குச் சென்றாலும் அது அளித்த நினைவுகளை ஒருபோதும் மறக்கமாட்டேன்," என்றார்.
ஆண்டுதோறும் பலமுறை அப்பூங்காவிற்கு வந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த குழந்தைகள் ஆர்மானும் சாஹிரும், பூங்கா இடமாறிய பின்னரும் அங்கு செல்வதைத் தொடர முடிவுசெய்துள்ளனர்.
இறுதி நாளில் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டவர்களும் பூங்காவிற்கு வந்திருந்தனர்.
பறவைப் பூங்காவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தமது நீண்டநாள் ஆசை நிறைவேறியதாகக் கூறினார் இந்தியாவின் பெங்களூரு நகரைச் சேர்ந்த குமாரி சந்தனா. ஆயினும், மீண்டும் அங்கு வரமுடியாது என்பது அவருக்கு வருத்தமளித்தது.
இரவு 7 மணியளவில் பூங்கா மூடப்பட்டதும் அதன் ஊழியர்கள், அங்கு வந்திருந்த மக்களுடன் சேர்ந்து, சோகம் கலந்த மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்கள் நுழைவாயிலில் நின்றபடி, இறுதி நாளன்று அங்கு வந்திருந்தோருக்கு விடைகொடுத்தனர்.
ஒரு குடும்பம்போல் இணைந்து பணியாற்றிய அவர்கள், அழகான பல நினைவுகளை அளித்த அவ்விடத்தைவிட்டுச் செல்வதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தனர்.
மண்டாயில் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் சஃபாரி, நைட் சஃபாரி, புதிய மழைக்காடு ஆகியவற்றுடன் புதிய பறவைகள் காப்பகமும் கூடிய விரைவில் இணையவிருக்கிறது.

