பொன்மணி உதயகுமார்
உள்துறைக் குழுவின் தேசிய சேவையாளர்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் பிடோக் நீர்த்தேக்கப் பூங்காவில் புதிய கூட்டு பொழுதுபோக்கு மனைக் கட்டடம் நேற்று அதிகாரபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
உயர்தர வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் அறிவார்ந்த மின்னிலக்கத் திறன்களும் நீடித்த நிலைத்தன்மை அம்சங்களும் உள்ளன. $85 மில்லியன் செலவில் 14,500 சதுர மீட்டரில் கட்டப்பட்டிருக்கும் இந்த பிடோக் நீர்த்தேக்க 'கிளப்ஹவுஸ்' ஒரு மாதத்தில் 94,000 பேரை வரவேற்கும் ஆற்றல் வாய்ந்தது.
தேசிய சேவையின் 55 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்தக் கட்டடத்தின் திறப்பு ஓர் இறுதி முத்தாய்ப்பு என்றார் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம்.
வட்டாரம், வடிவமைப்பு, வசதிகள் ஆகிய அம்சங்களில் உயர்தொழில்நுட்பத்துடனும் முதல் தரத்துடனும் புதிய கட்டடங்கள் கட்டப்படுவது, 2016ல் உருவாக்கப்பட்ட பெருந்திட்டமாகும். அதில் இந்த பிடோக் நீர்த்தேக்க கட்டடம் அடங்கும்.
நேற்றைய நிகழ்வில் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் ஃபைஷல் இப்ராஹிம், அறிவார்ந்த தேசத் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தேசிய சேவை புரிந்தோருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சிங்கப்பூர் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது என்று கூறிய அமைச்சர் சண்முகம், தேசிய சேவை புரிவோர் பெருமை கொள்ளும் விதத்தில் இந்த 'கிளப்ஹவுஸ்' திகழும் என்றும் கூறினார்.
மூன்று மாடி உயரம் கொண்ட உள்ளரங்க நீர் விளையாட்டு சாகச நிலையத்தில் சிங்கப்பூரின் ஆக நீளமான உட்புற நீர் சறுக்கு அமைந்துள்ளது. இதன் நீளம் 114 மீட்டர். தொழில்நுட்ப அம்சங்கள் பொருந்திய பல மாடி விளையாட்டரங்கம், உடற்பயிற்சிக்கூடம், நிகழ்வுகளுக்கான இடங்கள், நெருப்பில் உணவு வாட்டி உண்பதற்கான வசதிகள், கருத்தரங்கு அறைகள், கலையரங்கம், மூன்று அறை வில்லாக்கள் போன்ற பல வசதிகளைக் கொண்டு இந்த 'கிளப்ஹவுஸ்' உருவாக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுப்புறத்திற்குத் தீங்கு விளைவிக்காத வண்ணம் மின்சாரம் சேமிக்கும் மின்விளக்குகள், சூரிய ஒளித் தகடுகள் போன்ற நீடித்த நிலைத்தன்மையைப் பேணும் அம்சங்கள் கொண்டும் சூரியக்கதிரின் வெப்பத்தைத் தடுக்கும் கூரைகள், இயற்கைக் காற்று வீசக்கூடிய அமைப்புமுறைகள் கொண்டும் இந்த 'கிளப்ஹவுஸ்' உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, பிடோக் நீர்தேக்கத்துடன் ஒன்றியவாறு தடையற்ற விதமாக இயற்கைக்கு மத்தியில் அமைந்துள்ளது இந்த இடம்.

