பதின்ம வயது மகள் அடிக்கடி வெளியே செல்வதில் ஆத்திரமடைந்த மாது ஒருவர், அந்த மகளின் வலது தொடையில் கத்தியால் குத்தினார். ஆயுதம் கொண்டு 15 வயது மகளுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்த அந்த 40 வயது தாயாருக்கு நேற்று 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்தாண்டு ஜூன் 20ஆம் தேதியன்று சிறுமி தூங்குவதற்காக தயாராகிக் கொண்டிருந்ததாகவும் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்த சிறுமியின் தாயார், திடீரென்று சிறுமியைத் திட்டத் தொடங்கியதாகவும் அறியப்படுகிறது. அதையடுத்து, சிறுமி கொல்லப்பட வேண்டியவரா என்று மாது தன் 21 வயது மூத்த மகளை நோக்கிக் கேட்டிருந்ததாக அறியப்படுகிறது.
தாயாரின் சினம் தன்பக்கம் திரும்பிவிடும் என்று அஞ்சி மூத்த மகள் பதிலளிக்கவில்லை.
பின்னர், சமையலறைக்குச் சென்ற அந்த மாது, ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு சிறுமியின் அறைக்குச் சென்றார்.
சிறுமியின் வலது தொடைப் பகுதியில் கத்தியால் குத்தியதில் ரத்தம் கசியத் தொடங்கியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். தாயாரின் தாக்குதலைத் தடுக்க முயன்றதில் சிறுமியின் வலது கையில் வெட்டுக் காயம் ஒன்று ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மகள் வெளியே செல்வதைத் தவிர்க்க, மாது தன் மகளைத் தாக்கியதாக ஒப்புக்கொண்டது குறித்து அரசுத்தரப்பு குறிப்பிட்டது. பின்னிரவு 3.20 மணியளவில் காவலர்களுடன் தொடர்புகொண்ட அந்த மாது, நடந்ததை எல்லாம் கூறிவிட்டார்.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி, ஜூன் 20 முதல் ஜூலை 1 முதல் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர், உறவினர் பராமரிப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

