2022 சிங்கப்பூர் பொதுச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வு முடிவு முடிவுகள் வரும் ஜனவரி 12ஆம் வெளியிடப்படுகிறது.
மாணவர்கள், தேர்வு முடிவுகளை தங்களுடைய உயர்நிலைப்பள்ளியில் பிற்பகல் 2 மணிக்கு கிடைக்கப்பெறலாம் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. அதுகுறித்த மேல் விவரங்களை மாணவர்கள் பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம்.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தேர்வுமுடிவுகளை வாங்க பள்ளிக்குச் செல்லக்கூடாது. மாறாக, 12ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியில் இருந்து சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகத்தின் இணையப்பக்கத்தில் அவர்கள் தங்களது முடிவுகளைப் பார்க்கலாம். சிங்பாஸ் கணக்கு வைத்திருக்கும் மாணவர்கள், இந்த மாதம் 12ஆம் தேதியில் இருந்து 26ஆம் தேதிவரை, அந்த இணையப்பக்கத்திற்குச் சென்று, முடிவுகளைப் பார்த்துக்கொள்ளலாம்.
உயர்நிலைப் பள்ளிகளின் அனைத்துலக மாணவர்களுக்கு, கணினி உருவாக்கிய பயனர் பெயர் அடங்கிய மின்மடல் வரும் 9ஆம் தேதி திங்கள்கிழமையில் இருந்து அனுப்பப்படும். அதைக்கொண்டு, அவர்கள் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகத்தின் இணையப்பக்கத்தில் நுழையலாம்.
தேர்வு முடிவுகளை நேரில் சென்று பெற முடியாத மாணவர்கள், அதுகுறித்து தங்கள் பள்ளிகளுக்குத் தெரிவிக்கும்படி கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள இன்னொருவரை நியமிக்கலாம். தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதியவர்களுக்கு இம்மாதம் 12ஆம் தேதி முதல் அஞ்சல் வழி தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும். சிங்பாஸ் வைத்திருப்பவர்கள் தேர்வு மதிப்பீட்டுக்கழக இணையப் பக்கம் வாயிலாகவும் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

