உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர், 2020 ஜனவரியில், தூங்கிக்கொண்டிருந்த தங்கையைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது, உடல்ரீதியாகத் துன்புறுத்தியது ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் மற்றொரு 13 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்தார்.
இக்குற்றங்களின் தொடர்பில் தற்போது 20 வயதாகும் அந்த ஆடவருக்குக் குறைந்தது 12 மாதங்கள் சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவல் நிலையத்தில் அவர் இதை நிறைவேற்ற வேண்டும் என்றும், சீர்திருத்தப் பயிற்சியில் கடுமையான உடற்பயிற்சி, மனநல ஆலோசனை ஆகியவையும் இடம்பெறலாம் என்றும் கூறப்பட்டது.
பாலியல் வன்புணர்வு தொடர்பில் சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் ஆடவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ஆடவரால் பாதிக்கப்பட்ட அவரது தங்கை தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அதன் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்ட ஆடவர் பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தனது வீட்டின் கீழ்த்தளத்தில் சந்திக்க வரும்படி 13 வயதுச் சிறுமி ஒருவரை அந்த ஆடவர் அழைத்ததாகக் கூறப்பட்டது.
அச்சிறுமியிடம் ஆடவர் தவறாக நடந்துகொண்டதுடன் அவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறப்பட்டது.
பின்னர் அவ்விடத்திலிருந்து வீட்டுக்குத் தப்பிச் சென்ற சிறுமியிடம் நடந்தது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கோரி ஆடவர் குறுஞ்செய்தி அனுப்பினார். இச்சம்பவத்தால் சிறுமி உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டதை ஒப்புக்கொண்டதுடன், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எட்டு அல்லது ஒன்பது வயது நிரம்பிய தங்கையிடம் தவறாக நடந்துகொண்டதையும் 2018ல் அவரைக் காயப்படுத்தியதையும் ஆடவர் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்களைக் காக்கும் பொருட்டு ஆடவர் பற்றிய மேல்விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.
ஆடவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்படக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
ஆடவர் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம் என்று மனநல நிபுணர் மதிப்பிட்டுள்ளதை அவர்கள் சுட்டினர்.
ஆடவரின் பாலியல் மனப்போக்கு அவர் மீண்டும் தவறு செய்யும் வாய்ப்பைக் காட்டுவதாகவும் அவரது தவறான நடத்தை முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

