ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அதிகாரபூர்வ திறப்பு
சொந்த கணினியைக் கொண்டு தொலைதூரத்தில் இருந்து ஆய்வு களை மேற்கொள்ள தோதாக சிங்கப்பூரின் முதலாவது இணைய மைய தரவுத்தள அடிப்படையிலான ஆய்வுக்கூடத்தை ரிபப்ளிக் பல துறைத் தொழிற்கல்லூரி (ஆர்பி) அதிகாரபூர்வமாக தொடங்கியது.
வேளாண்மை, உணவுத் தொழில்நுட்பத்துக்காக அந்த ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டு உள்ளது. ஆர்பி மாணவர்களும் ஊழியர்களும் தங்களுடைய பரிசோதனைகளைத் தொலைதூரத்தில் இருந்தபடியே கண்காணிக்க அந்தப் புதிய வகை ஆய்வுக் கூடம் வழிவகுக்கிறது. சுற்றுச்சூழல் தொழில்நுட்ப, பகுப்பாய்வு ஆய்வுக்கூடத்தையும் அவர்கள் நிர்வகித்து நடத்தலாம்.
கணினித் தரவுகளை அவர்கள் பகுப்பாய்வு செய்யலாம். வழக்கமான ஆய்வுக் கூடங்களில் இருந்து வேறுபட்டு இந்த ஆய்வுக் கூடம் செயல்படும்.
சிங்கப்பூர் தனக்குத் தேவைப்படும் சத்துணவில் 30 விழுக்காட்டை 2030ஆம் ஆண்டு வாக்கில் தானே தயாரித்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
அந்த இலக்கு நிறைவேற இந்தப் புதிய ஆய்வுக் கூடத்தின் பகுப்பாய்வு ஆற்றல்கள் ஆதரவு அளிக்கும் என்று ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பயனீட்டு அறிவியல் பள்ளி இயக்குநர் லிம் பூன் வாட் நேற்று ஊடகத்திடம் தெரிவித்தார்.
பொதுவான இணையத் தரவுத்தளத்தை அடிப்படையாகக்கொண்டு ஆய்வுக்கூடம் செயல்படும் என்பதால் எல்லாரும் சேர்ந்து கூட்டு முயற்சிகளில் ஈடுபட வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் டாக்டர் லிம் குறிப்பிட்டார்.
ஷிமாட்சு (ஆசிய பசிபிக்) என்ற ஜப்பானைச் சேர்ந்த துல்லிய சாதனங்கள், மருத்துவச் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து 3,000 சதுர அடி பரப்பளவுள்ள ஆய்வுக்கூடத்தை ஆர்பி அமைத்து இருக்கிறது.
கல்லூரி நேற்று பொது வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. அதை ஒட்டி கல்வி அமைச்சர் சான் சுன் சிங் புதிய ஆய்வுக்கூடத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். ஆய்வுக்கூடத்தில் இயந்திர மனிதன் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதன்மூலம் அந்தக் கல்லூரி பயனீட்டு அறிவியல் பள்ளியைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் ஆண்டுதோறும் பயன் அடைவார்கள். ஆர்பியும் ஷிமாட்சுவும் தங்கள் பங்காளித்துவ உறவை விரிவுபடுத்தும் வகையில் நேற்று மூன்றாண்டு உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டன.

