ரைஃபிள் ரேஞ்ச் ரோடு சம்பவம்: மனிதவள அமைச்சு விளக்கம்

2 mins read
8717ec28-be17-405e-ac63-149b70f28a70
-

பாரந்தூக்கி ஒன்றில் இயந்திரத்தை ஏற்றி அதை அப்படியே மேலே தூக்க முயன்றபோது, பாரந்தூக்கியின் அடி இரும்புச் சட்டங்கள் இயந்திரத்தின் கீழே போதிய அளவுக்கு உள்ளே போகவில்லை.

அந்த நிலையிலேயே பாரந்தூக்கி மேலே தூக்கப்பட்டதால் இயந்திரம் சாய்ந்து பக்கத்தில் இருந்த ஊழியர்மீீது விழுந்து அவரை நசுக்கிவிட்டது.

இதுதான் எண் 601 ரைஃபிள் ரேஞ்ச் ரோட்டில் சென்ற மாதம் 27ஆம் தேதி நிகழ்ந்த விபத்திற்குக் காரணம் என்பது முதல் கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இயந்திரத்தால் நசுக்கப்பட்ட திரு லே சோவ், 31, என்ற ஊழியர் பின்னர் மருத்துவமனையில் மாண்டுவிட்டார்.

அவர் 'ஆர்சிஎம் ரிசோர்சஸ்' என்ற மனிதவள நிறுவனத்தில் வேலை பார்த்தார். சம்பவம் தொடர்பில் 62 வயது ஆடவர் ஒருவர் கைதாகி இருக்கிறார்.

அந்த ஆடவர் அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விவரங்களைத் தெரிவித்த மனிதவள அமைச்சு, பாரந்தூக்கிகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் அத்தகைய வாகனங்களைப் பயன்படுத்துவதன் தொடர்பிலான பாதுகாப்பு அம்சங்களை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.

இதனிடையே, ரைஃபிள் ரேஞ்ச் ரோடு சம்பவம் பற்றி விழிப்பூட்டிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம், சென்ற ஆண்டில் வேலை இடங்களில் பாரந்தூக்கி தொடர்பில் ஆறு உயிர்பலி விபத்துகள் நிகழ்ந்து இருப்பதாகத் தெரிவித்தது.

பாரந்தூக்கி வாகனத்தை இயக்குவதற்கான ஆற்றல் பெற்ற, நல்ல தேர்ச்சியுடன் கூடிய ஊழியர்களை மட்டும் அந்த வேலையில் நிறுவனங்கள் ஈடு படுத்த வேண்டும் என்றும் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

பாரந்தூக்கி வாகன இயக்குவோர் அனைவரும் தேவையான சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் புதிதாகப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.

இடம்விட்டு இடம் நகரும் கனரக வாகனங்கள், சாதனங்களைப் பொறுத்தவரை பாதுகாப்புமிக்க வேலை நடைமுறைகளை நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

பாரத்தைத் தூக்குவதற்கு முன்னதாக எல்லாவற்றையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

அதோடு மட்டுமின்றி, இதர பாதுகாப்பு நடைமுறைகளும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றுவேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் குறிப்பிட்டுள்ளது.