அங் மோ கியோவில் இருக்கும் வீவக புளோக் ஒன்றில் வசிப்போரில் 150க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
எளிதில் தீப்பிடித்து எரியக்கூடிய வாயு காற்றில் கசிந்ததே அதற்கான காரணம்.
அங் மோ கியோ அவென்யூ 10 புளோக் 401க்கு அருகே வாயுக்கசிவு பற்றி இரவு 10 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீப்பிடித்து எரியக்கூடிய பொருள்களைக் கண்டுபிடிக்கக்கூடிய கருவிகள் மூலம் அந்தப் பகுதியில் காற்றில் வாயு கலந்திருந்தது தெரியவந்தது. தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அந்தப் படையினர் வாயுவைக் கலைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் புளோக்கைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்களைப் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட புளோக்குக்கு அருகே நடக்கும் வேலைகளில் இருந்து அந்த வாயு கசிந்ததாக தெரியவந்தது என்று குடிமைத் தற்காப்புப் படை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஒருவருக்குச் சுகவீனம் ஏற்பட்டது என்பது அந்த இடத்தில் இருந்த தற்காப்புப் படை மருத்துவர் மூலம் தெரியவந்தது. என்றாலும் அவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டார்.

