கருணாநிதி துர்கா
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் தமிழ்மொழி அடங்கினாலும் அதன் பயன்பாட்டில் சவால்கள் ஏற்படவே செய்கின்றன. பள்ளிகளில் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்றுவரும் சூழல் இருந்தாலும் பள்ளிப் பருவத்திற்குப் பின்னர் தமிழோடு இணைந்திருக்கும் வாய்ப்புகள் குறையக்கூடும்.
இதனால் இங்குள்ள இளையர்கள், வெவ்வேறு ஊடகங்
களின் வழியாக தமிழ்மொழியுடன் தொடர்ந்து இணைந்திருக்க முயன்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவரான சேவா மாணிக்கம், 18, தமிழ்க் கவிதைகளை இயற்றுவதிலும் வாசிப்பதிலும் அதிக நாட்டம் கொண்டவர்.
அவரது வீட்டில் உள்ளோர் தமிழ்மொழியிலேயே உரையாடுவர். அவருடைய குடும்ப உறுப்பினர்களும் கவிதைகளில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள்.
இவ்வாறு குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் ஊக்கத்தால் 12 வயதிலிருந்து தமிழ்க் கவிதைகள் இயற்றி வருகிறார் சேவா.
தமிழ்மொழி தனது வாழ்வாதாரத்திற்கு பிரதானமாக அமையாவிட்டாலும் வாழ்வுக்கு ஆதாரமாக எப்போதும் அமையும் என்கிறார் இவர். யாப்பிலக்கணம், புதுக் கவிதைகள், சங்ககால கவிதைகள் போன்றவற்றைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள விரும்புகிறார் சேவா.
இதேபோல் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட்டு இசையமைப்புக் கற்றுக்கொண்ட செந்தில்குமார் ஹரீஸ்வரன், 18, தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.
சிறு வயதிலிருந்து திரைப்
படங்கள், பாடல்கள் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளார் இவர்.
பாடல்களுக்கு முதுகெலும்பாக அமையும் அதன் வரிகளையும்கூட ஹரீஸ்வரன் எழுது
வதில் என்பவர் ஈடுபட்டுள்ளார்.
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு சூழலையும் அதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும் இவை எடுத்துரைப்பதால் இவற்றைத் தன்னோடு எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது என்கிறார் ஹரீஸ்வரன்.
இவ்வாறாக தன்னையே அறிந்திட உதவும் இந்த ஊடகங்கள், தமிழ்மொழி மீது தொடர்ந்து ஈடுபாடு கொள்ளவும் மொழியை நேசிக்க வைக்கவும் உதவுவதாக இவர் கருதுகிறார்.
இவரைப்போல் வாழ்க்கையை மட்டுமல்லாமல் தனது கற்பனை உலகையும் மெருகூட்டும் தமிழ் நாவல்கள், கவிதைகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார் ப.அ. ரகுநந்தன், 18.
'கவிமாலை விதைகள்' மாணவரணியின் துணைத்தலைவராக உள்ள இவர், தமிழ் நாவல்கள் தனது கற்பனை வளத்தைத் தூண்டுவதாகக் கூறுகிறார்.
உயர்நிலைப் பள்ளியிலும் தொடக்கக் கல்லூரியிலும் தமிழ் இலக்கணப் பாடத்தைப் பயின்றதன் மூலம் தமிழ்மொழி மீது இவர் கொண்ட ஆர்வத்துக்கு மேலும் ஊக்கம் கிடைத்தது.
எதிர்காலத்தில் தமிழ் ஆசிரியர் பணியில் சேரவேண்டும் என்ற ரகுநந்தனின் லட்சியம், இவரை தமிழ்மொழியுடன் தொடர்ந்து இணைந்திருக்கச் செய்கிறது.
தமிழ் மேடை நாடகங்கள் வழி தமிழின் அருமையை உணர்வதாகக் கூறுகிறார் பூஜா புண்ணியமூர்த்தி, 24.
2021ல் தமிழ் மேடை நாடக உலகில் காலடி எடுத்து வைத்த இவர், இதுவரை மூன்று படைப்பு களில் ஈடுபட்டுள்ளார்.
அவாண்ட் நாடகக்குழுவின் தயாரிப்புகளான அபிமன்யு, 4ஜி என்ற மேடை நாடகங்களில் நடித்துள்ளார் இவர்.
பேச்சுத் தமிழில் மட்டுமின்றி செந்தமிழிலும் பேசும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் தமிழ் மொழியிலுள்ள நுணுக்கங்களையும் முறையான உச்சரிப்புகளையும் துல்லியமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது என்றார் பூஜா.
எதிர்காலத்தில் மேடை நாடகங்களில் நடிப்பதைக் கைவிடாமல் தமிழ்மொழியுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகிறார் பூஜா.

