தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) பகுதி நேர ஊழியர்கள், மூத்த ஊழியர்கள் ஆகியோரின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தவிருக்கிறது.
இவ்விரு தரப்பினரும் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வதற்குப் போதிய வாய்ப்புகளோ போதிய பாதுகாப்போ இன்றித் தவிப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. என்டியுசி எதிர்கொள்ளும் புதிய சவால்களில் இவையும் அடங்கும் என்று அதன் உதவித் தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் சூ கூறினார்.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய இவ்விரு பிரிவினருக்கும் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
வடகிழக்கு மாவட்ட மேயருமான திரு சூ, சிங்கப்பூர் கண்ணோட்டங்கள் 2023 எனும் கருத்தரங்கில் இணையம்வழி பங்கேற்றார்.
வேலை எனும் கருப்பொருளில் கொள்கை ஆய்வுக் கழகம் அக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கொவிட்-19 கிருமிப் பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகப் பொருளியலில் இடையூறுகளை ஏற்படுத்திய நிலையில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இதனால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவில் உள்ள ஊழியர்களைப் பாதுகாக்க நேரிட்டுள்ளது என்றார் திரு சூ.
குறைவான கல்வி, குடும்ப விவகாரங்கள், உடற்குறை அல்லது மனநல பாதிப்பு உடையோர், வயதானோர் போன்றோருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுவதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். அரசாங்கத்துடன் இணைந்து என்டியுசி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றாரவர்.

