'வழக்கறிஞர்கள் தொழில்முறைத் தரநிலைகளை கட்டிக்காக்க வேண்டும்'

'வழக்கறிஞர்கள் தொழில்முறைத் தரநிலைகளை கட்டிக்காக்க வேண்டும்'

2 mins read
d3a6bae8-72ce-44ac-a66f-c7e999aefb34
-

வழக்­க­றி­ஞர்­கள் நடத்தை விதி­முறை­க­ளை­யும் தொழில்­மு­றைத் தர­நி­லை­க­ளை­யும் மீறும் போக்கு கணி­ச­மான அள­விற்கு அதி­க­ரித்­துள்­ள­தா­கத் தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் கூறி­யுள்­ளார்.

தர­நி­லை­க­ளைக் கட்­டிக்­காக்க வழக்­க­றி­ஞர்­கள் இணைந்து செயல்­ப­ட­வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

புதிய சட்ட ஆண்­டின் தொடக்க நிகழ்ச்­சி­யில் திரு மேனன் உரை­யாற்­றி­னார். வழக்­க­றி­ஞர் தொழி­லுக்கு வரை­ய­றுக்­கப்­பட்ட தர­நி­லை­யைப் பேணு­வ­தில் கவ­னம் செலுத்­தா­விட்­டால் அது நிலை­மையை மேலும் மோச­மாக்­கக்­கூ­டும். அத்­த­கைய போக்கு சகித்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என்­றார் அவர்.

உச்ச நீதி­மன்ற அரங்­கத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் ஏறக்­கு­றைய 300 வழக்­க­றி­ஞர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

வழக்­க­றி­ஞர்­கள் மீதான புகார்­கள் தொடர்­பில் நிய­மிக்­கப்­பட்ட ஒழுங்கு நட­வ­டிக்­கைக் குழுக்­க­ளின் எண்­ணிக்கை கடந்த 2018ஆம் ஆண்­டில் இருந்து கூடி­யி­ருப்­ப­தா­கக் கூறிய தலைமை நீதி­பதி, வழக்­க­றி­ஞர்­கள் நேர்மை, நாண­யம், சேவை ஆகிய பண்­பு­களை விடாப்­பி­டி­யா­கப் பின்­பற்ற வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

மூன்று முக்­கி­ய­மான போக்கு­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தா­கத் திரு மேனன் கூறி­னார். முத­லா­வ­தாக சட்ட உதவி நாடு­வோ­ருக்கு வழக்­க­றி­ஞர்­கள் விசு­வா­ச­மாக இல்­லா­தது, இரண்­டா­வது தொழில்­மு­றைத் தர­நி­லைக்கு ஏற்ப நடந்து கொள்­ளா­தது, மூன்­றா­வ­தாக நீதி­மன்ற நடை­மு­றை­களை மதித்து நடக்­கா­தது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் மெய்­நி­கர் முறை­யில் வழக்­கு­கள் கையா­ளப்­ப­டு­வது மட்­டுமே இதற்­குக் கார­ணம் என்று கூற­மு­டி­யாது என்­றார் தலைமை நீதி­பதி.

வழக்­க­றி­ஞர்­கள் பின்­பற்ற வேண்­டிய நன்­னெ­றிக் கொள்­கை­களை மறு­நிர்­மா­ணம் செய்­யக்­கூ­டிய உத்­தி­களை உரு­வாக்­கும் பொறுப்பை ஏற்க ஒரு குழு அமைக்­கப்­படும் என்­றார் அவர்.

நீதி­பதி வெலரி தியன், மூத்த வழக்கறிஞர் ஜிம்மி யிம் இரு­வ­ரும் அந்­தக் குழு­விற்­குத் தலைமை ஏற்­பர்.

வழக்­க­றி­ஞர் தொழில் என்­பது வாழ்­வா­தா­ரத்­துக்­கான வேலை மட்­டு­மன்று; அது நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பங்­க­ளிப்பு என்­றார் திரு மேனன்.

கடந்த 2020ஆம் ஆண்டு வழக்­க­றி­ஞர் மன்­றத்­துக்­கான தேர்­வில் சிலர் ஏமாற்­றி­யது குறித்­துத் தெரி­ய­வந்­த­போது தாம் இது­கு­றித்து ஆழ்ந்து சிந்தித்ததாகத் தலைமை நீதி­பதி குறிப்­பிட்­டார்.

ஏமாற்று நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்ட 11 பேரும் தங்­கள் விண்­ணப்­பங்­க­ளைத் திரும்­பப் பெற அனு­ம­திக்­கப்­பட்­டது.

நீடித்த முறை­யில் மதி­யு­ரை­ஞர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்தே இளம் வழக்­கறி­ஞர்­கள் தொழிலை நன்கு கற்­றுக்­கொள்­கின்­ற­னர் என்­ப­தைச் சுட்­டிய திரு மேனன், நேர்மை, நாண­யம் உள்­ளிட்ட பண்­பு­க­ளை­யும் அவர்­கள் இதன்­வழி கற்­றுக்­கொள்­வ­தா­கக் கூறி­னார்.

கிரு­மிப் பர­வலை முன்­னிட்டு மெய்நிகர் முறை­யில் செய­லாற்­றிய நிலை­யில் இளம் வழக்­கறி­ஞர்­கள் இவ்­வாறு நேர­டி­யாக உட­னி­ருந்து கற்கும் வாய்ப்­பைப் பெரி­தும் இழந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

சம்­ப­ளம் குறைவு என்­ப­தால் வழக்­க­றி­ஞர் தொழி­லைக் கைவி­டு­வோர் பற்­றியும் அவர் கருத்துரைத்தார்.

"விரை­வில் பணம் சம்­பா­திக்­கும் நோக்­கத்­து­டன் இத்­தொ­ழி­லுக்கு வரு­வோர் ஏமாற்­றத்­தையே எதிர்­கொள்­வர்," என்­று திரு சுந்தரேஷ் மேனன் கூறினார்.