வழக்கறிஞர்கள் நடத்தை விதிமுறைகளையும் தொழில்முறைத் தரநிலைகளையும் மீறும் போக்கு கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளதாகத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியுள்ளார்.
தரநிலைகளைக் கட்டிக்காக்க வழக்கறிஞர்கள் இணைந்து செயல்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
புதிய சட்ட ஆண்டின் தொடக்க நிகழ்ச்சியில் திரு மேனன் உரையாற்றினார். வழக்கறிஞர் தொழிலுக்கு வரையறுக்கப்பட்ட தரநிலையைப் பேணுவதில் கவனம் செலுத்தாவிட்டால் அது நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும். அத்தகைய போக்கு சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்றார் அவர்.
உச்ச நீதிமன்ற அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏறக்குறைய 300 வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களின் எண்ணிக்கை கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து கூடியிருப்பதாகக் கூறிய தலைமை நீதிபதி, வழக்கறிஞர்கள் நேர்மை, நாணயம், சேவை ஆகிய பண்புகளை விடாப்பிடியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மூன்று முக்கியமான போக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் திரு மேனன் கூறினார். முதலாவதாக சட்ட உதவி நாடுவோருக்கு வழக்கறிஞர்கள் விசுவாசமாக இல்லாதது, இரண்டாவது தொழில்முறைத் தரநிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளாதது, மூன்றாவதாக நீதிமன்ற நடைமுறைகளை மதித்து நடக்காதது.
கொவிட்-19 கிருமிப் பரவலால் மெய்நிகர் முறையில் வழக்குகள் கையாளப்படுவது மட்டுமே இதற்குக் காரணம் என்று கூறமுடியாது என்றார் தலைமை நீதிபதி.
வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய நன்னெறிக் கொள்கைகளை மறுநிர்மாணம் செய்யக்கூடிய உத்திகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்க ஒரு குழு அமைக்கப்படும் என்றார் அவர்.
நீதிபதி வெலரி தியன், மூத்த வழக்கறிஞர் ஜிம்மி யிம் இருவரும் அந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்பர்.
வழக்கறிஞர் தொழில் என்பது வாழ்வாதாரத்துக்கான வேலை மட்டுமன்று; அது நீதியை நிலைநாட்டுவதற்கான பங்களிப்பு என்றார் திரு மேனன்.
கடந்த 2020ஆம் ஆண்டு வழக்கறிஞர் மன்றத்துக்கான தேர்வில் சிலர் ஏமாற்றியது குறித்துத் தெரியவந்தபோது தாம் இதுகுறித்து ஆழ்ந்து சிந்தித்ததாகத் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேரும் தங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டது.
நீடித்த முறையில் மதியுரைஞர் ஒருவரிடமிருந்தே இளம் வழக்கறிஞர்கள் தொழிலை நன்கு கற்றுக்கொள்கின்றனர் என்பதைச் சுட்டிய திரு மேனன், நேர்மை, நாணயம் உள்ளிட்ட பண்புகளையும் அவர்கள் இதன்வழி கற்றுக்கொள்வதாகக் கூறினார்.
கிருமிப் பரவலை முன்னிட்டு மெய்நிகர் முறையில் செயலாற்றிய நிலையில் இளம் வழக்கறிஞர்கள் இவ்வாறு நேரடியாக உடனிருந்து கற்கும் வாய்ப்பைப் பெரிதும் இழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சம்பளம் குறைவு என்பதால் வழக்கறிஞர் தொழிலைக் கைவிடுவோர் பற்றியும் அவர் கருத்துரைத்தார்.
"விரைவில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இத்தொழிலுக்கு வருவோர் ஏமாற்றத்தையே எதிர்கொள்வர்," என்று திரு சுந்தரேஷ் மேனன் கூறினார்.

