தம் தந்தை தமக்குப் பரிசாக வழங்கிய கைப்பை பற்றி 17 வயது இளம்பெண் ஒருவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட டிக்டாக் காணொளியை இரு நாள்களிலேயே கிட்டத்தட்ட 2.2 மில்லியன் பார்த்துவிட்டனர்; கிட்டத்தட்ட 170,000 பேர் அக்காணொளிக்கு விருப்பக்குறியிட்டிருந்தனர். அந்த $80 மதிப்புள்ள 'சார்ல்ஸ் & கீத்' கைப்பையே தமக்குக் கிடைத்ததில் மிகவும் விலை உயர்ந்த பரிசு என்றும் பதிவிட்டிருந்தார் ஸோயி எனும் அப்பெண். தமது குடும்பம் பிலிப்பீன்சில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தபோது, 'பிரட் டாக்' கடையில் ரொட்டி வாங்கி சாப்பிடுவதே தாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டிருந்தார். இப்பதிவைத் தொடர்ந்து அவரைக் கிண்டல் செய்து பல பதிவுகளும் எதிர்மறை பதில்களும் வந்துகொண்டே இருந்ததால், ஸோயி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, எதிர்மறைக் கருத்துகளை முடக்கினார். இருப்பினும், மனிதநேயமிக்க டிக்டாக்வாசிகள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துமழை பொழிந்தனர். இந்நிலையில், ஸோயியின் கதை, பிரதமர் லீ சியன் லூங்கின் துணைவியார் ஹோ சிங்கின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருவாட்டி ஹோ சிங் தமது ஃபேஸ்புக் பதிவில், 'ஸோயிக்கும் அவருடைய பெற்றோர்க்கும் எனது அன்பும் அரவணைப்பும்' என்று ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.
எங்கே போயிற்று மனிதநேயம்? டிக்டாக் பயனர் உருக்கம்
1 mins read
குமாரி ஸோயியின் கதை பிரதமர் லீ சியன் லூங்கின் துணைவியார் ஹோ சிங்கின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டிக்டாக் காணொளிப் படம் -

