கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான பாலியல் மற்றும் காயப்படுத்துதல் குற்றங்களுக்காக 2,234 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 15 விழுக்காட்டினர், அதாவது 328 பேர், 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு பிரம்படி தரப்படவில்லை.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இதை எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.
பாலியல் வன்புணர்வு, பாலியல் தாக்குதல், சிறுவரிடம் பாலியல் வன்புணர்வு, கடுமையாகக் காயப்படுத்துதல், குற்றம் புரியும் நோக்கில் கொலை செய்தல் போன்றவை பாலியல் வன்கொடுமை மற்றும் காயப்படுத்துதல் குற்றங்களாகக் கருதப்படும்.
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக கைதான 2,234 ஆடவர்களில் 1,906 பேர் 50 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் குற்றங்களைப் புரிந்தனர்.
ஆனால் அவர்களில் 21 பேர் மட்டும் கைதானபோது 50 வயதைத் தாண்டிவிட்டனர். அந்த 21 பேரில் 17 பேர் பாலியல் குற்றவாளிகள் ஆவர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரம்படி விதிக்க சட்டத்தில் இடமில்லை.
கடும் பாலியல் குற்றவாளிகள் தொடர்பான புள்ளிவிவரங்களை வழங்குமாறு உள்துறை அமைச்சரிடம் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வூ மெங் கேட்டிருந்தார்.
50 வயதுக்கு மேற்பட்ட பாலியல் வன்புணர்வு குற்றவாளி களுக்கும் பிரம்படி தரப்பட வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் பதிவிட்டதை அடுத்து, அந்த விவகாரம் பரவலான கவனத்தை ஈர்த்தது.

