கடந்த இரண்டு நிதியாண்டுகளில் விளையாட்டுப் பந்தயங்கள், 'சிங்கப்பூர் பூல்ஸ் லாட்டரி' பந்தயங்கள் ஆகியவற்றுக்குக் கூடுதல் செலவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன, உலகளவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கியது ஆகியவை அதற்கான முக்கியக் காரணங்களில் சில.
சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகத்தின் சென்ற நிதியாண்டு கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. அதில் மொத்தம் 9.2 பில்லியன் வெள்ளி லாட்டரி பந்தயங்களுக்கும் விளையாட்டுப் பந்தயங்களுக்கும் செலவு செய்யப்பட்டது. இந்தத் தொகை, முந்தைய நிதியாண்டில் பதிவானதைக் காட்டிலும் சுமார் 40 விழுக்காடு அதிகம்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் சென்ற நிதியாண்டில்தான் பந்தயங்களுக்கு ஆக அதிகத் தொகை செலவிடப்பட்டதென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்ற மாதம் தெரிவித்திருந்தது.
"சூதாட்டப் பிரச்சினை, அதில் ஈடுபடும் தனிநபர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரையும் அன்புக்குரியவர்களையும் பாதிக்கிறது; அதனால் சூதாட்டப் பிரச்சினையைக் கையாள்வதில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது," என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
நிலைமையைக் கண்காணித்து சூதாட்டப் பிரச்சினையைச் சமாளிக்கக் கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுமா என்பதை ஆராய உள்துறை அமைச்சு, சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவற்றுடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் மரீன் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சியா கியன் பெங்கின் கேள் விக்குத் திரு சுவா பதிலளித்தார்.

