செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
46d8aa11-dcfd-4492-9173-4cb2ba03c0bf
-

வீவக வீட்டுக்கு மாறும் 1,284 தனியார் வீட்டு உரிமையாளர்கள் மேல்முறையீடு

தனியார் வீட்டை விற்று 15 மாதங்கள் ஆன பின்னரே வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டை வாங்க முடியும் என்ற விதிமுறை நடப்புக்கு வந்ததிலிருந்து, 1,284 தனியார் வீட்டு உரிமையாளர்கள் தங்களுக்கு விலக்கு அளிக்கும்படி கழகத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த விதிமுறை கடந்த செப்டம்பரில் நடப்புக்கு வந்தது.

கழகம் 902 மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலித்திருப்பதாகவும் அவற்றில் 38 விழுக்காடு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.

கொவிட்-19 தடுப்பூசிகள் சளிக் காய்ச்சல் தடுப்பூசிகள் போல மாறும்

கொவிட்-19 தடுப்பூசிகள் புதிய வழக்கநிலையின் ஒரு பகுதியாக மாறும் என்றும் சளிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஒவ்வோர் ஆண்டும் போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுவது போல கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படும் நிலை வரும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றியபோது அவர் அதைத் தெரிவித்தார்.

சீனா அதன் எல்லைகளைத் திறப்பது புதிய வழக்கநிலையின் ஒரு பகுதியாகி விட்டது என்ற நிலையில் அடுத்த முறை வேறொரு வட்டாரத்தில் கொவிட்-19 தொற்று அலை ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆபத்து ஏற்படும் என்று நினைக்கும்போதெல்லாம் சிங்கப்பூர் உலகளாவியக் கண்காணிப்பை அதிகப்படுத்தி, எல்லை நடவடிக்கைகளை முடுக்கிவிடத் திட்டமிடலாம். ஆனால் ஆகக் கடைசியான தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு வருவதே ஆகச் சிறந்த தற்காப்பு என்றார் திரு ஓங்.

உட்லண்ட்ஸ், துவாஸ் சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

கடந்த டிசம்பர் மாதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், உட்லண்ட்ஸ், துவாஸ் குடிநுழைவுச் சாவடிகளில் நெரிசலைச் சமாளிக்க, 10ல் ஒன்பது வாகனச் சாவடிகளில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அதிகாரிகளை நிறுத்தியது.

டிசம்பர் மாதத்தில் கொவிட்-19 பரவலுக்கு முந்திய எண்ணிக்கையிலான பயணிகள் நிலவழிச் சுங்கச் சாவடிகளைக் கடந்தனர். துவாஸ், உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடிகளின் இரு வழிகளிலும் சென்ற மாதம் 400,000 பயணிகள் கடந்தனர். சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அதை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்புக்குப் பாதிப்பு வராமல் எல்லைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வழிகள் பற்றி புக்கிட் பாத்தோக் தொகுதி உறுப்பினர் முரளி பிள்ளை எழுப்பிய கேள்விக்கு திரு சண்முகம் பதில் அளித்தார்.

பேருந்து நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, கூடுதல் இருவழி பேருந்துச் சேவைகளை ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் எல்லைகளை நோக்கிச் செல்லும் போக்குவரத்தைச் சீர்படுத்த போக்குவரத்துக் காவல்துறையுடன் சேர்ந்து ஆணையம் பணியாற்றுகிறது.

சிம் ஆன் எச்சரிக்கை:

மக்களைத் திசைதிருப்ப வேண்டாம்

தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், பொறுப்புடன் கொள்கைகளை விவாதிக்கும்படி தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாயிடம் வலியுறுத்தியுள்ளார்.

அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தை அரசாங்கம் நேர்மையற்ற வகையில் கையாண்டதாக திரு லியோங் கூறியிருந்ததை திருவாட்டி சிம் சாடினார். அந்த ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தைத் தள்ளிவைக்கும் தீர்மானத்தை, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த திரு லியோங் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

திரு லியோங் பொதுமக்களை வேண்டும் என்றே தவறாக திசைதிருப்புவதாகவும் பொய்யான எதிர்பார்ப்புகளை உருவாக்குவதாகவும் திருவாட்டி சிம் நேற்று அவருக்கு பதில் அளித்தபோது கூறினார்.

மற்ற ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டங்களைப் போல அங் மோ கியோவில் உள்ள திட்டம் இல்லை என்றும் சிலர் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் திரு லியோங் கூறியிருந்தார். ஆனால் அதை திருவாட்டி சிம் மறுத்தார்.