எஸ்பிஎச் மீடியா குழுமத்தில் நடத்தப்பட்ட அமைப்பு ரீதியிலான விசாரணையில், அதன் விற்பனைத் தரவுகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அக்குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டியோ லே லிம் விளம்பரதாரர்களுக்கு நேற்று மாலை மின்னஞ்சல் அனுப்பினார். விற்பனைத் தரவுக்கும் விளம்பரக் கட்டணங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து சில விளம்பரதாரர்கள் இடையே கேள்விகள் இருந்ததை திருவாட்டி டியோ மின்னஞ்சலில் சுட்டினார். விற்பனைத் தரவுகளின் அடிப்படையில் எஸ்பிஎச் மீடியா குழுமத்தின் விளம்பரத் தொகுப்புத் திட்டங்கள் நிர்ணயிக்கப்படுவதில்லை என்று திருவாட்டி டியோ கூறினார்.
"ஒவ்வொரு செய்தித்தாளுக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே எங்களது ஊடகக் கட்டணங்களும் விளம்பரத் தொகுப்புத் திட்டங்களும் அமைகின்றன," என்று அவர் விவரித்தார்.
சிங்கப்பூர் மக்கள்தொகையைப் புள்ளிவிவர அடிப்படையில் பிரதிநிதிக்கும் ஆய்வுத் தளம் வாயிலாக வாசகர்கள் எண்ணிக்கை குறித்த தரவு பெறப்படுவதாக திருவாட்டி டியோ சொன்னார்.
"நம்பிக்கைக்குரிய, பொறுப்புள்ள நிறுவனமாக உங்களுடனான உறவைத் தொடர நாங்கள் விரும்புகிறோம். உங்களுடைய புரிந்துணர்வுக்கும் ஆதரவுக்கும் நன்றி," என்று கூறி அவர் மின்னஞ்சலை நிறைவுசெய்தார்.

