இரண்டாவது ஆண்டாக நிறுவனங்களிடையே வர்த்தக நம்பிக்கை மேம்பட்டது
கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதற்குப் பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வர்த்தக நம்பிக்கை மேம்பட்டுள்ளது. ஆனால், பொருளியல் மந்தநிலை குறித்த கவலையும் வர்த்தகச் செலவினங்களும் அதிகரித்துள்ளதால், இங்குள்ள நிறுவனங்கள் புத்தாண்டில் கூடுதல் கவனத்துடன் இருப்பதாக சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் அண்மைய தேசிய வர்த்தக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அடுத்த 12 மாதங்களில் பொருளியல் மோசமடையும் என்பதை தாங்கள் எதிர்பார்ப்பதாக இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 931 நிறுவனங்களில் 26 விழுக்காட்டு நிறுவனங்கள் கூறின. கடந்த ஆண்டு இந்த விகிதம் 13 விழுக்காடாக இருந்தது.
ஆய்வில் பங்கெடுத்த 931 நிறுவனங்களில் 73 விழுக்காட்டு நிறுவனங்கள் சிறிய, நடுத்தர நிறுவனங்களாகும். எஞ்சியவை பெரிய நிறுவனங்கள்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 முதல் நவம்பர் 23ஆம் தேதிவரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பணவீக்க அழுத்தம் இவ்வாண்டும் தொடரும் என்பதை தாங்கள் எதிர்பார்ப்பதாக ஆய்வில் பங்கெடுத்த கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் (97%) கூறின. இதனால் தாங்கள் பாதிப்படைந்துள்ளதாக கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு (32%) நிறுவனங்கள் குறிப்பிட்டன.
மனிதவள விவகாரங்களை ஒரு பெரிய பிரச்சினையாக நிறுவனங்கள் குறிப்பிட்டன. அதிகரித்துவரும் மனிதவளச் செலவு (75%), இளம் வயது ஊழியர்களை ஈர்த்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது (51%), புதிய வெளிநாட்டு மனிதவளக் கொள்கைகளால் செலவினங்கள் அதிகரிப்பது (48%), உயர்திறன் பெற்ற உள்ளூர் ஊழியர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது (47%), கடுமையான கொள்கைகள் வெளிநாட்டு ஊழியர்களின் வரத்தைக் கட்டுப்படுத்துவது (43%) உள்ளிட்டவை நிறுவனங்களின் அக்கறைக்குரிய அம்சங்களில் அடங்கும்.
சம்பளம் (78%), தளவாடச் செலவுகள் (52%), கொள்முதல் செலவுகள் (48%), பயனீட்டுச் செலவுகள் (45%) ஆகிய செலவுகள் குறித்தும் நிறுவனங்கள் கவலைப்படுகின்றன.
செலவினங்களைச் சமாளிப்பதிலும் (74%), மனிதவள சவால்களைக் கையாள்வதிலும் இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் ஆதரவளிக்கும் என தாங்கள் நம்புவதாக நிறுவனங்கள் குறிப்பிட்டன.

